அரிய இரத்தம் உறைதல் பிரச்சினை காரணங்களுக்காக குழந்தைகள் மீதான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி சோதனையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சமீபத்தில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு அரிய இரத்த உறைவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளால் இதுவரை உலகளவில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தடுப்பூசி செலுத்தியது மட்டும் தான் காரணமா என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஆனால், உலகம் முழுக்க 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன் கணக்கான பெரியவர்களுக்கு (Adults) அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

இரத்த உறைவு அச்சத்தால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடைசெய்த நாடுகளும், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதனை தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைத்த பிறகு, தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.
இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தலைமையில் குழந்தைகள் மீதான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பரிசோதனை பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கியது. அதில் 6 முதல் 17 வயதுடைய 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு செய்தித் தொடர்பாளர் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த சோதனையில் எந்தவொரு பாதுகாப்பு சிக்கல்களும் எழவில்லை, ஆனால் பெரியவர்களுக்கு ஏற்பட்டுள்ள அரிதான இரத்த உறைதல் பிரச்சினைகள் எங்களுக்கு பரந்த கவலையை தூண்டியுள்ளது.
இந்த சோதனை முயற்சியில் குழந்தைகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை வழங்கவும், சோதனைகளை மீண்டும் தொடங்கவும், பிரித்தானியாவின் மருந்துகள் கண்காணிப்புக் குழுவான Medicines and Healthcare products Regulatory Agency-யிடமிருந்து கூடுதல் தகவலுக்காக ஆக்ஸ்ஃபோர்டு காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் மருத்துவ குழுவினர் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கும் இரத்த உறைவு பிரச்சினைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.