மரணப்படுக்கையில் நெருங்கிய தோழி: நட்புக்காக என்ன கைமாறு செய்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மரணப்படுக்கையில் இருக்கும் தமது நெருங்கிய தோழியின் குழந்தைகளை தத்தெடுத்து விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார் 2 குழந்தைகளுக்கு தாயாரான பெண்மணி ஒருவர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் மனதை உருகவைக்கும் குறித்த சம்பவம் நிகழந்துள்ளது. மிஸ்ஸி ஆம்ஸ்ட்ராங் மற்றும் சாரா ஹான்கின்ஸ் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தோழமையில் இருந்து வருகின்றனர்.

இருவரும் தங்களது இன்ப துன்பங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி குடும்பத்தில் நடைபெறும் விருந்து விழாக்களுக்கும் தவறாமல் கலந்து கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சார ஹான்கின்ஸ் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மரணத்தை எதிர் நோக்கி மரணப்படுக்கையில் உள்ளார்.

குறித்த பெண்மணிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிஸ்ஸி ஆம்ஸ்ட்ராங் தமது தோழிக்கு செய்த கைமாறு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மட்டுமின்றி பலரது பாராட்டுக்களையும் பெருவாரியாக பெற்று வருகிறது.

மரணப்படுக்கையில் இருக்கும் சாராவின் 4 குழந்தைகளையும் சட்டப்பூர்வமாக ஆம்ஸ்ட்ராங் தத்தெடுத்துள்ளார். தன்னால் அந்த குழந்தைகள் நான்கு பேரையும் அவர்களது தாயார் பார்த்துக்கொண்டது போன்று கண்டிப்பாக அக்கறை செலுத்த முடியும், அதற்கு தமது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பும் தமக்கு உள்ளது என ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தொழில் ரீதியான பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டபோது குறித்த பெண்மணிகள் இருவரும் தோழிகளாயுள்ளனர். அதன் பின்னர் இருவருக்கும் வேலை கிடைத்து, திருமணம், குழந்தைகள் என, மாகாணத்தின் இருவேறு பகுதியில் இருந்தாலும் இருவரது குடும்பமும் ஒன்றாகவே இதுவரை வாழ்க்கையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டுதான் சாரவுக்கு நரம்பு தொடர்பான கொடிய நோய் இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. அதுமுதல் அவர் தமது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தே மிகவும் வேதனையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த முடிவை அவருக்கு சொன்னபோது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என சாரா தெரிவித்துள்ளார்.

இனி நிம்மதியாக மரணத்தை எதிர்கொள்வேன் என சாரா தமது தோழியிடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments