ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
122Shares

பழைய ஜெருசலேம் நகரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையைத் தோண்டி, யூதர்களுக்கான புகழ்பெற்ற ஆலயத்தின் அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சூட்ட இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டொனால்டு டிரம்பை கௌரவிக்க தாம் விரும்புவதாகவும் அமைச்சர் யிஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

'மேற்க்குச்சுவர்' என்பது யூதர்கள் வழிபடும் புனித இடமாகும்.

இந்நிலையில், டெல் அவிவ் நகரிலிருந்து அதிவேக போக்குவரத்து விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய ரயில் நிலையம் மற்றும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. இந்த சேவை அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களால் 'ஹரம் அல்-ஷெரீஃப்' என்றும் யூதர்களால் 'டெம்பில் மவுண்ட்' என்றும் அறியப்படும் "மேற்க்குச்சுவருக்கு" பின்னால் உள்ள மதிலை சுற்றி சுரங்கம் அமைக்க இஸ்ரேல் அரசு பூமியை தோண்டும் பணியில் ஈடுபட்டது பாலத்தீனர்கள் இடையே போராட்டத்தைத் தூண்டியது.

ஜெருசலேத்தின் பழைய நகரத்தை 'உலக பாரம்பரிய இடமாக' அறிவித்த ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவும், புகழ்பெற்ற புராதன இடத்தை தோண்டுவதற்கும் சுரங்கப்பாதை அமைப்பதற்கும் கவலை தெரிவித்திருந்தது.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேத்துக்கு அமைக்கவுள்ள இந்த ரயில் சேவை விரிவாக்கமானது போக்குவரத்து அமைச்சகத்தின் "மிக முக்கிய தேசிய திட்டம்" என்று இஸ்ரேலிய செய்தித்தாளான எடியோத் அஹ்ரொனொத்திடம் தெரிவித்துள்ளார் அமைச்சர் கட்ஸ்.

மேற்கு ஜெருசலேத்தில் உள்ள பின்யெனாய் ஹாஉமா நிலையத்தில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள மேற்குச்சுவர் பகுதி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்க இஸ்ரேலிய ரயில்வே கமிட்டிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்த அதிபர் டிரம்பின் தைரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை அங்கீகரிக்கும் வகையில் புனித இடமான 'மேற்குச்சுவருக்கு' அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட உள்ளதாக" கட்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இஸ்லாமிய நாடுகள் இடையே பல போராட்டங்களை இம்முடிவு தூண்டியது.

மேலும், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது.

இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- BBC - Tamil

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்