விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட செல்லப் பிராணி நாய் இறந்துவிட்டதால், குறித்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் Houston's பகுதியில் உள்ள George Bush சர்வதேச விமானநிலையத்திலிருந்து நியூயார்க்கிற்கு, யுனைட்டடு நிறுவனத்திற்கு சொந்தமான 1284 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒருவர் தன் குழந்தைகளுடனும், செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 10 வயது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள், நாயை கீழே வைக்காமல் விமானத்தின் மேல் தளத்தில் வைக்கும் படி கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பையில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த நாய் மேலே வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மணி நேர பயணத்திற்கு பின் விமானம் தரையிரங்கியதும், பையை திறந்து பார்த்த போது, நாய் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் ஜுன் லாரா என்பவர், நான் குறித்த விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது பெண் ஒருவரின் செல்லப் பிராணியான நாய் ஒன்று பையில் அடைக்கப்பட்டு விமானத்தின் மேல் தளத்தில் வைக்கப்பட்டது. அந்த நாயை அவர்கள் தங்கள் காலிற்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
ஆனால் விமான ஊழியர்கள் அதை மேல் தளத்தில் வைக்கும் படி கூறினர். எந்த வித காற்றோட்டமோ, தண்ணீர் இன்றி அந்த நாய் அடைக்கப்பட்டதால், மூன்று மணி நேரமாக போராடி இறந்துள்ளது.
நாய் இறந்ததை அறிந்த அந்த குடும்பத்தினர் விமானநிலையத்தில் அழுதனர். உடன் இருந்த குழந்தைகளும் அழுததைப் பார்த்த போது மனம் தாங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் இனிமேல் இந்த விமானத்தில் நான் பயணம் செய்யமாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவலை அறிந்த விமானநிறுவனம் இது ஒரு துரதரிஷ்டவசமானது, எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது.