வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் Mike Pompeo இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி வட கொரியாவில் அணு ஆயுத சோதனைகள் தொடர்ச்சியாக செய்து வருவதாலும், மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாலும் வட கொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் பல ஆண்டுகளாகவே பகை நிலவி வருகிறது.
கடந்த செவ்வாய்கிழமை புளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் ஊடகங்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், Washington மற்றும் Pyongyangக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
எனினும் கிம் ஜாங் உன்னுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA இயக்குனர் Mike Pompeo வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உடன் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபர்களும் வட கொரிய அதிபர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.
Mike Pompeo கிம் ஜாங் உடன் நடத்திய சந்திப்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை அல்லது உள்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இடம்பெறவில்லை.
முழுக்க அமெரிக்க உளவு அதிகாரிகள் மட்டுமே இந்த சந்திப்பின் போது இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற மே அல்லது ஜுன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டை தேர்வு செய்து அங்கு டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்காக முதல் கட்டமாக ஐந்து நாடுகள் தேர்வு செய்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சிரியாவில் அமெரிக்க கூட்டு படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக கடும் பகையுடன் மோதலில் இருக்கும் அமெரிக்கா மற்றும் வட கொரியா திடீர் என சுமூக பேச்சுவார்த்தை நடத்த முயல்வது வரும் நாட்களில் உலக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.