அமேஸான் எக்கோ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in அமெரிக்கா

போர்ட்லேண்டில் வசிக்கும் ஒரு பெண் தனது கணவருடன் பேசிக்கொண்டிருந்த உரையாடல்கள் சியாட்டிலில் உள்ள இன்னொருவருக்கு அமேஸான் எக்கோவின் மூலம் அனுப்பப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்ட்லேண்டைச் சேர்ந்தவர் Danielle, தனது வீடு முழுவதும் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஸ்பீக்கர்களை பொருத்தியிருந்தார்.

திடீரென்று ஒரு நாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் உடனடியாக உங்கள் அலெக்ஸா கருவிகளின் இணைப்புகளைத் துண்டியுங்கள் என்று எச்சரிக்கும் தொனியில் கூற, பயந்துபோன Danielle உடனடியாக இணைப்புகளைத் துண்டித்தார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர் தான் சியாட்டிலில் இருப்பதாகவும் Danielleஇன் வீட்டில் அவர் அவரது கணவருடன் பேசிய உரையாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டு தனது வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நபர் Danielleஇன் கணவரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். Danielle முதலில் நம்பாவிட்டாலும், பேசிய நபர் அவர்கள் பேசிய விடயத்தைக் கூறி, “ஹார்டுவேர் ஃப்ளோர்” தொடர்பாகத்தானே நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்க, அதிர்ந்து போனார் Danielle. நல்ல வேளையாக அவர்கள் மிகவும் அந்தரங்கமான எந்த விடயத்தையும் பேச வில்லை.

இது தொடர்பாக அமேஸானைத் தொடர்பு கொண்டபோது போர்ட்லேண்டிலுள்ள ஒரு பயனரின் வீட்டில் இது நடந்தது உண்மைதான் என்றும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தது. இந்த தகவல் வெளியானதும் பல அலெக்ஸா பயனர்கள் தங்கள் ஸ்பீக்கர்களை அகற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் தனது ஸ்பீக்கர்களை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இனி எக்காரணம் கொண்டும் அமேஸான் எக்கோ ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ள Danielle, அமேஸானிடம் தனது ஸ்பீக்கர்களுக்கான தொகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்