பாகிஸ்தானுக்கு 300 மில்லியன் டொலர் உதவித்தொகையை ரத்து செய்த அமெரிக்கா: காரணம் என்ன?

Report Print Kabilan in அமெரிக்கா

பாகிஸ்தான் ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க தவறியதால், அந்நாட்டிற்கான 300 மில்லியன் டொலர்கள் உதவித்தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆயுதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாகவும், எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த ஆயுதக் குழுக்களை பாகிஸ்தான் அனுமதிப்பதாகவும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

குறிப்பாக ஹக்கானி மற்றும் ஆப்கான் தலிபான் ஆகிய குழுக்கள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் அமெரிக்க படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த தவறியதாக அமெரிக்கா விமர்சித்தது. ஆனால், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பாகிஸ்தான் பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டு தங்களையே ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் நாட்டிற்கான பாதுகாப்பு உதவி அனைத்தையும் நிறுத்தப் போவதாக, அமெரிக்கா கடந்த ஜனவரி மாதமே அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த உதவித்தொகையான 300 மில்லியன் டொலர்களை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தொகையை அவசர விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கு செலவிடப் போவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers