அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா #MeToo மூலம் பாலியல் புகார் கூறுபவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், தற்போது சமூக வலைதளங்களில் #MeToo எனும் ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், #MeToo குறித்து மெலானியா டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
‘#MeToo இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும்.
அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெறுமனே, நான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன். அவர் அதைச் செய்துவிட்டார் என்று கூறக்கூடாது.
ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில், சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு சித்தரித்துவிடுவர். அது சரியல்ல’ என தெரிவித்துள்ளார். மெலானியாவின் கணவர் டொனால்டு டிரம்ப் ஏராளமான பாலியல் புகார்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
