வழிபாட்டுத் தலத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபர்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில், நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 11 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரத்தில் யூத ஜெபக்கூடத்தில் நேற்று ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கூட்டத்தினை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதனால் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபரை பொலிசார் பிடிக்க முற்பட்டபோது, அவர் சுட்டதில் பொலிசார் மீது குண்டு பாய்ந்தது. பின்னர் குறித்த நபரை பொலிசார் மடக்கி பிடித்தனர்.

அந்நபரின் பெயர் ராபர்ட் போவர்ஸ் என்பதும் தெரிய வந்துள்ள நிலையில், எதற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்