வீங்கிக் கொண்டே சென்ற வயிறு... தொப்பை என கருதிய நபர்: பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வீங்கிக் கொண்டே சென்ற வயிறை தொப்பை என கருதிய நபருக்கு பரிசோதனையில் புற்றுநோய் கட்டி என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் வயிற்றில் இருந்து சுமார் 77 பவுண்டு அளவுக்கு கட்டியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இது ஒரு 10 வயது சிறுவனின் உடல் எடைக்கு ஒப்பாகும்.

47 வயதான ஹெக்டர் ஹெர்னாண்டஸ் தமது வீங்கிய வயிறால் ஏற்பட்ட அனுபவத்தை பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.

ரயில் பயணங்களின் போது மக்கள் தமது வீங்கிய வயிறை வெறித்து பார்ப்பது தமக்கு எப்போதும் ஒருவித மனக்கவலையை அளித்தது என்றார். மது அருந்தும் பழக்கம் அறவே இல்லாத ஹெக்டர், மாமிச உணவுகளையும் ஒருகட்டத்தில் ஒதுக்கி வைத்துள்ளார்.

இருப்பினும் வயிறு வீக்கம் குறையவில்லை. இதனிடையே வயிறு மட்டும் வீக்கம் கண்டுவர எஞ்சிய உடல் பாகங்கள் மெலிந்து வருவதை கவனித்த ஹெக்டர், மருத்துவரை அணுக முடிவு செய்துள்ளார்.

அதன்படி 2016 ஆம் ஆண்டு மருத்துவர் ஒருவரை அணுகி தனது நிலை தொடர்பில் விவரித்துள்ளார் ஹெக்டர். ஆனால் இது சாதாரணம் எனவும், சில மருந்துகள் மட்டு எடுத்துக் கொண்டால் போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வேறொரு மருத்துவரை சந்திக்கவே முடிவெடுத்துள்ள ஹெக்டர் 2017 ஆம் ஆண்டு William Tseng என்ற மருத்துவரை அணுகியுள்ளார்.

அவர் மேற்கொண்ட பரிசோதனையில் ஹெக்டருக்கு liposarcoma என்ற அரியவகை புற்றுநோய் தாக்கியுள்ளதாக கண்டறிந்தார்.

ஜூலை மாதம் நடந்த அறுவை சிகிச்சையில் ஹெக்டரின் வயிற்றில் இருந்து சுமார் 77 பவுண்டு எடை கொண்ட கட்டியை மருத்துவ குழு சுமார் 6 மணி நேரம் போராடி அகற்றியுள்ளது.

தமது மருத்துவ வாழ்க்கையில் இதுவரை இந்த அளவுக்கு பெரிய கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியது இல்லை என மருத்துவர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி உடலில் எஞ்சிய பாகங்களுக்கு இந்த அபூர்வ வகை புற்றுநோய் பரவாமல் இருந்தது ஹெக்டரின் நல்ல காலம் எனவும், இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் புற்றுநோய் அறிகுறி தென்பட்ட ஹெக்டரின் ஒரு சிறுநீரகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த புற்றுநோய் தாக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள மருத்துவர்கள், நாலு மாதத்திற்கு ஒருமுறை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்