இனியும் அமெரிக்காவால் உலக காவலனாக இருக்க முடியாது: டிரம்பின் அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக பொலிசாக அமெரிக்காவால் இனிமேலும் இருக்க முடியாது என்றும், மற்ற நாடுகளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

அமெரிக்க செனட் சபையில் ஜனாதிபதி டிரம்ப் தாக்கல் செய்த நிதி மசோதாவை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஏற்க மறுத்து விட்டதால், செலவுக்கு பணமின்றி அமெரிக்க நிர்வாகம் கடந்த சில நாட்களாக முடங்கி கிடக்கிறது.

இந்நிலையில் டிரம்ப் நேற்று முன்தினம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்பும் சென்றார்.

அதிகாரப்பூர்வமாக இந்தப் பயணம் அறிவிக்கப்படாத நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அமெரிக்க ராணுவப் படைத்தளத்திற்கு சென்ற டிரம்ப் அங்கு அமெரிக்க வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், உலக பொலிசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது என்றும், எல்லா சுமைகளையும் அமெரிக்காவே சுமக்க வேண்டும்மென்பது நியாயமில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘உலகில் பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத நாடுகளில் கூட அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகவே கூறுகிறேன், இது ஏளனத்துக்குரியது.

எந்த வகையிலும் எங்களின் தன்னிகரில்லாத ராணுவத்தை மற்ற நாடுகள் சொந்த லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துவதை விரும்பவில்லை. இதற்காக காசு, பணமெல்லாம் எங்களுக்கு தர வேண்டியதில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவில் மீண்டும் ஒரு தீவிரவாத சம்பவம் நடந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், அதற்கான பதிலடி பயங்கரமானதாக இருப்பதுடன் இதுவரை சந்திக்காத இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது அமெரிக்க ராணுவம், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக 150 நாடுகளில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளதால், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை பெற அதற்கான பணத்தை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers