சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்து விட்டோம்! டொனால்டு டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை ஒழித்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை, கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அங்கிருந்தவாறு உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நிறுவப்போவதாக பிரகடனப்படுத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தினர். குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து தங்களது பயங்கரவாதத்தை வெளிக்காட்டினர்.

அவர்களை அரசுப் படைகள் தாக்க வந்தபோது, பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போரிட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை மற்றும் தரைப்படையினரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டனர்.

அமெரிக்க படையினரின் ஆவேசமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பயங்கரவாதிகள் பலர் சரணடைந்தனர். அதன் பின்னர், ஈராக்கில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக அந்நாட்டு அரசு கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவித்தது.

அதே போல் சிரியாவிலும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த கடைசி பகுதியான பாகுஸ் நகரை கைப்பற்ற, சில மாதங்களாக சிரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க வீரர்கள் நடத்திய உச்சக்கட்ட போர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அங்கிருந்த பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சிலர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சிரியாவில் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுடன் சிரியா மண்ணில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை துடைத்தெறிந்து விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நைஜீரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளதால், அவர்களையும் முற்றிலும் தீர்த்துக்கட்டும் வரை அமெரிக்கா கண்காணிப்புடன் விழிப்பாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers