எங்கள் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது! ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

தாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனம் என்று மதிப்பிட வேண்டாம் என, ஈரானுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு என அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில் தான் பறந்தது என்றும், அதை வேண்டுமென்றே ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியது.

அதனைத் தொடர்ந்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். அத்துடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, அதனை கடைசி நிமிடத்தில் டிரம்ப் கைவிட்டதாக செய்தி வெளியானது.

அதன் பின்னர் தங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என, ஈரானின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் நேற்று எச்சரித்தார்.

இதற்கிடையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் டிரம்ப் கூறியதை குறிப்பிட்டு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் கூறுகையில்,

‘தாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக, பலவீனமாக மதிப்பிட வேண்டாம். மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள எங்கள் ராணுவம், எப்போதும் தாக்குதலுக்கு தயாராகவே இருக்கிறது ’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்