மோடிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! காரணம் இதுதான்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிகப்படியான வரியை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதாம் மற்றும் வால்நட் உட்பட 28 பொருட்கள் மீது இந்தியா அதிகப்படியான வரிகளை விதித்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஜூன் 1ஆம் திகதியோடு இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வரியில்லா வர்த்தக சலுகையை அமெரிக்கா நிறுத்தியது தான்.

இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28, 29ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகளின் மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் மோடி-டிரம்ப் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இதற்கிடையில் டிரம்ப் தற்போது இந்தியாவின் வரி விதிப்பு குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பைக் கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா 10 சதவிதம் மற்றும் 25 சதவிதம் முறையே அதிகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்