வெளிநாட்டில் மகளை கொலை செய்த கேரள தந்தை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுமியை கொலை செய்த வழக்கில் அவரது வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது மனைவி சினி மேத்யூஸ். இந்த தம்பதி அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் நகரில் வசிக்கிறார்கள்.

சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் இந்தியா வந்த போது ஒரு ஆசிரமத்தில் இருந்து ஷெரின் மேத்யூஸ் (3) என்ற சிறுமியை தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், கடந்த 2017 அக்டோபர் மாதம் 7-ம் திகதி இரவு ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் வீட்டுக்கு வெளியே நிறுத்தியபோது காணாமல் போய்விட்டதாக மேத்யூஸ் பொலிசில் புகார் செய்தார்.

சிறுமியை கொடுமை செய்ததாக மேத்யூஸை கைது செய்த பொலிசார் பின்னர் ஜாமீனில் விட்டனர்.

இதையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு பின்னர் மேத்யூஸ் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் ஷெரின் உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் குழந்தை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, வளர்ப்பு தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இறுதிக்கட்ட விசாரணையின் போது மேத்யூஸ், குழந்தையை அடித்து காயப்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி மேத்யூசுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பரோல் பெற முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

வெஸ்லியின் மனைவி சினி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர் மீதான வழக்கு கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers