ஈரான் எல்லையை அமெரிக்கா மீண்டும் மீறினால் கடும் எதிர்வினையை சந்திக்கும் என பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஈரான் நாட்டு எல்லையில் புகுத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் நாட்டு எல்லையில் எங்களது விமானம் பறக்கவில்லை என அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. மேலும் இதற்கு பதிலடி கொடுக்க வான்வழித் தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாகவும், அப்பாவி பொதுமக்கள் இறந்து விடுவார்கள் என்பதற்காக கடைசி நேரத்தில் அதனை நிறுத்தியதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த பரபரப்பால், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, அமெரிக்கா மீண்டும் தங்களது எல்லைகளை மீறினால் கடுமையான எதிர்வினைகளை சந்திக்கும் என எச்சரித்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது