பிரித்தானியா மீது கடும் ஆத்திரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

தன்னுடைய நிர்வாகத்தை தகுதியற்ற நிர்வாகம் என விமர்சனம் செய்திருந்த பிரித்தானிய தூதருடன் இனி அமெரிக்கா எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாது என ட்ரம்ப் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதர் சர் கிம் டாரோச் எழுதிய மின்னஞ்சல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், டிரம்ப் நிர்வாகத்தை நாங்கள் நம்பவில்லை, அது தகுதியற்றது, பாதுகாப்பற்றது மற்றும் திறமையற்றது என கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர், சர் கிம் மீது தெரசா மே "முழு நம்பிக்கை" வைத்திருப்பதாகக் கூறினார், ஆனால் ஜனாதிபதியைப் பற்றிய அவரது மதிப்பீட்டை ஏற்றுகொள்ள்வில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த கசிவு "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறிய அவர், பிரதமர் அலுவலகம் வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த கசிவுக்கு இவான்கா டிரம்பிடம் மன்னிப்பு கேட்பதாக பிரித்தானிய வர்த்தக மந்திரி இன்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " பிரித்தானியா மற்றும் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பிரெக்ஸிட்டைக் கையாண்ட விதம் குறித்து நான் மிகவும் விமர்சித்தேன். அவரும் அவருடைய பிரதிநிதிகளும் என்ன குழப்பத்தை உருவாக்கியுள்ளனர். அதை எப்படி செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் பேசினேன். ஆனால் அவர் வேறு வழியில் செல்ல முடிவு செய்தார். எனக்கு பிரித்தானிய தூதரை தெரியாது. ஆனால் அவருடன் நாங்கள் இனி எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானியாவிற்கான நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் விரைவில் ஒரு புதிய பிரதமரைப் பெறுவார்கள். கடந்த மாதம் பிரித்தானியாவிற்கான வருகையை நான் முழுமையாக அனுபவித்தபோது, ​​ராணியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்