பெண் எம்.பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து தெரிவித்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சையால் கிளம்பிய எதிர்ப்பு!

Report Print Kabilan in அமெரிக்கா

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலை, குடியுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் பிற நாட்டவர்களின் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டுள்ளார்.

அவ்வப்போது இனரீதியான கருத்துக்களை கூறும் டிரம்ப், தற்போது மீண்டும் அதேபோல் கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பிக்கள் குறித்து கூறுகையில்,

‘முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி பெண் எம்.பிக்கள், எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்.

அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே செல்லட்டும். அங்கு தான் உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் திறமையை வைத்து, குற்றங்களாலும், ஊழலாலும் சிதைந்து போன அவர்களின் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யலாமே’ என தெரிவித்தார்.

டிரம்பின் இந்த கருத்து மீண்டும் இனவெறி தொடர்பான சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஜயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இவர்கள் அண்மைகாலமாக டிரம்பின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வருபவர்கள் ஆவர்.

இதனைத் தொடர்ந்து, டிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அத்துடன் ஜனநாயக கட்சி தலைவர்களும், சக பெண் எம்.பிக்களும் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers