அமெரிக்காவில் 13 வயதிலேயே மூன்று டிகிரிகளை முடித்த தமிழக மாணவி!

Report Print Kabilan in அமெரிக்கா

தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அமெரிக்காவில் தனது பள்ளிப் படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் தொடங்கி மூன்று டிகிரிகளை முடித்து சாதனைப் படைத்துள்ளார்.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீயா என்ற 13 வயது சிறுமி, தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 20 ஆண்டுகளாக அமெரிக்காவிலேயே இருந்தபோதும், தாய்மொழியை பிள்ளைகள் மறந்துவிடக்கூடாது என ஸ்ரீயாவின் தாய் உறுதியாக இருந்துள்ளார்.

அதன் விளைவாக நன்றாக தமிழ் பேசும் ஸ்ரீயா, பள்ளிப் படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் சேர்த்து படிக்க ஆரம்பித்தார். இவரது சகோதரர் பிரணவ் 4ஆம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரிப் படிப்பையும் சேர்த்து படிக்க ஆரம்பித்தார். இதனால் தனது 16வது வயதில் அவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், 4 டிகிரிகளை முடித்தார்.

தற்போது அவர் அணு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளார். தனது சகோதரரைப் பார்த்து, ஸ்ரீயாவும் 7வது வயதில் இருந்தே கல்லூரிப் படிப்பையும் தொடங்கினார். இந்நிலையில், 3 டிகிரிகளை முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அவர்.

மேலும், ரோபோக்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் கல்வியை தொடர உள்ளதாக கூறும் ஸ்ரீயா, மற்றவர்களும் தன்னைப் போல் எளிதாக கல்வி கற்க யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தனது நேரத்தை திட்டமிட்டு செலவு செய்வதால் இது சாத்தியமானதாக அவர் தெரிவித்துள்ளார்.

எப்போது துறுதுறுப்புடன் காணப்படும் அவர், தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். 13 வயதிலேயே மூன்று டிகிரிகளை முடித்ததால், கல்லூரியில் மிகக் குறைந்த வயதுடைய மாணவி என்ற பெருமையை ஸ்ரீயா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers