71 வருட திருமண வாழ்க்கை... ஒரே நாளில் மரணமடைந்த காதல் தம்பதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் திருமணம் முடித்து நீண்ட 71 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒன்று ஒரே நாளில் மரணமடைந்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜோர்ஜியா மாநிலத்தின் Waynesboro பகுதியில் குடியிருக்கும் ஹெர்பர்ட் மற்றும் மர்லின் பிரான்சிஸ் தம்பதிகளே நீண்ட 71 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பகல் 2.20 மணிக்கு 94 வயதான ஹெர்பர்ட் மரணமடைந்துள்ளார். அதே நாளில் சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னால் அதே 2.20 மணிக்கு 88 வயதான மர்லின் பிரான்சிஸ் மரணமடைந்துள்ளார்.

இந்த காதல் தம்பதிகளை மரணம் கூட வெறும் 12 மணி நேரமே பிரித்து வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் வியந்து பேசியுள்ளனர்.

இந்த இருவரின் காதல் கதையானது Waynesboro பகுதியில் உள்ள ஒரு சின்ன தேநீர் விடுதியில் வைத்து துவங்கியுள்ளது.

அப்போது 16 வயதான மர்லின் மீது 22 வயதான ஹெர்பர்ட் காதல் வயப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு பின்னர் தமது காதலை வெளிப்படுத்திய ஹெர்பர்ட் தம்மை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கோரியுள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றுள்ள ஹெர்பர்ட், பின்னர் கொரியா மற்றும் வியட்நாம் போரில் பங்கேற்றுள்ளார்.

நீண்ட 22 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ள ஹெர்பர்ட், பணி நிமித்தம் தமது மனைவியுடன் அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

6 பிள்ளைகளுக்கு பெற்றோரான ஹெர்பர்ட் மற்றும் மர்லின் தம்பதிக்கு 15 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

ஒரே நாளில் மரணமடைந்த இந்த காதல் தம்பதிகளை திங்களன்று ஒன்றாகவே நல்லடக்கம் செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்