பிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான மோசடி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பிறக்காத தங்களது பிள்ளையை இறந்ததாக கூறி பணம் வசூலித்த சம்பவம் நண்பர்களால் அம்பலமாகியுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தின் சோமர்செட் கவுண்டி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் ஜெஃப்ரி மற்றும் கெய்சி லாங் தம்பதி.

இவர்களே பிறக்காத தங்கள் பிள்ளையை இறந்ததாக கூறி சமூக வலைதளம் மூலமாக வசூல் வேட்டை நடத்தியவர்கள்.

சமூக வலைதளத்தில் கெய்சி லாங் ஒருமுறை தாம் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வந்துள்ளார்.

இறுதியில் இரண்டு மாத காலம் தமக்கு முழு ஓய்வு தேவை என கூறி, சமூக வலைதளத்தில் இருந்து மாயமானார்.

பின்னர் ஒரு நாள் தங்களுக்கு அழகான ஆண் பிள்ளை பிறந்தது என்றும், ஆனால் சில மணி நேரத்தில் இறந்துவிட்டதாகவும் குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்த சோகமான பதிவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அந்த தம்பதியின் கோரிக்கையை ஏற்று இறுதிச் சடங்கு நிறைவேற்ற நிதியுதவியும் அளித்து வந்துள்ளனர்.

ஆனால் கெய்சியின் தோழி ஒருவருக்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் எழவே, அவர் உடனடியாக இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டிருந்த அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

அதில் ஜெஃப்ரி தம்பதியின் ஒரு பொய் அம்பலமானது. இதில் அதிர்ச்சியடைந்த அவர், பிள்ளை பிறந்ததாக கூறப்பட்ட மருத்துவமனையில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் அப்படி ஒரு பிள்ளை பிறந்ததாகவும், கோளாறினால் இறந்ததாகவும் பதிவாகவில்லை என பதில் அளித்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெஃப்ரி தம்பதி தங்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பணம் சுருட்டவே இந்த திட்டத்தை செயல்படுத்தியதாக தெரியவந்தது.

இதனையடுத்து இருவர் மீதும் மோசடி மற்றும் திருட்டு குற்றத்திற்கு வழக்குப் பதிந்துள்ளனர். எதிர்வரும் அக்டோபர் மாதம் இருவரையும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers