திடீர் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா.. ஐநா சபையில் இன்று விவாதம்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

கடந்த 19ஆம் திகதி, தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை ஏவி அமெரிக்கா திடீர் சோதனை நடத்தியது. அதன் பின்னர், கலிபோர்னியா கடற்கரையில் இருந்து 500 கிலோ மீற்றர் தொலைவுக்கு பறந்து இலக்கினை துல்லியமாக குறித்த ஏவுகணை அழித்ததாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ரஷியா, ‘ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்’ என விமர்சித்தது. அத்துடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முன்பாகவே அமெரிக்கா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியது.

ஆனால், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி ரஷியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த மாதம் அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட உள்ளது. ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த விவாதத்தில், அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்