வயது வந்த பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்: வழக்கில் நிலவும் மர்மம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிள்ளைகளுடன் இன்பமாக சுற்றுலா சென்ற ஒரு தாய், தங்கள் சுற்றுலா குறித்த புகைப்படங்கள் செய்திகளையெல்லாம் சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்த நிலையில், திடீரென, வயது வந்த தனது இரண்டு பிள்ளைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அட்லாண்டாவில் பிரபலமான மருத்துவரான கிறிஸ்டோபர் எட்வர்ட்ஸ், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வந்தார்.

அவரது மனைவி மார்ஷா (58), மகள் எரின் எட்வர்ட்ஸ் (20) மற்றும் மகன் கிறிஸ் எட்வர்ட்ஸ் (24) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் தனது மகனை தொடர்பு கொள்ள முயன்றிருப்பார் போலும், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அவர்கள் வசித்து வந்த பகுதி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி அவர்கள் வீட்டுக்கு சென்ற பொலிசார், மார்ஷாவும் அவரது பிள்ளைகளும் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ந்து கிறிஸ்டோபருக்கு தகவலளித்துள்ளனர்.

மூவர் உடலிலும் துப்பாக்கிக் குண்டுக்காயங்கள் உள்ளன. காயங்களை வைத்துப் பார்க்கும்போது, மார்ஷா தனது பிள்ளைகளை துப்பக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆனால் இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் மூவரும் வாட்டிகனுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

அது தொடர்பான புகைப்படங்களையும் செய்திகளையும் மார்ஷா தனது சமூக ஊடக பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்றுகூட, இப்படி ஒரு பிள்ளைகள் எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்பது போல் ஒரு பதிவையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்படி இருக்கும் நிலையில், ஏன் மார்ஷா பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொலிசார் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது மேலதிக தகவல்கள் எதையும் அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்