என் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா
417Shares

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் தனது மனைவியை பறிகொடுத்த அமெரிக்கர், மனைவியை கெளரவிக்கும் விதமாக இலங்கையில் செய்து வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் லுவிஸ் எலன். மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் லுவிஸ் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு, நன்றிக் கடன் செலுத்தும் வகையில் இரத்தினபுரி மருத்துவமனையின் சிறுவர் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

இலங்கையிலுள்ள நண்பர்களின் உதவியுடன் இதை லுவிஸ் செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் விடுமுறையை கழிப்பதற்காகவும், வைத்தியசாலையின் கட்டட பணிகள் குறித்து ஆராயவும் லுவிஸ் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் இலங்கை வந்திருந்தார்.

இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹொட்டலில் லுவிஸின் மனைவி மோனிகா மற்றும் மகன்கள் காலை உணவை உட்கொண்டிருந்த தருணத்திலேயே, அந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் லுவிஸ் மனைவி மோனிகா உயிரிழந்தார்.

இது குறித்து லுவிஸ் கூறுகையில், ஒரு விநாடியில் எனது வாழ்க்கையில் அனைத்து விடயங்களும் மாறி விட்டன.

எனினும், இவ்வாறான விடயங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கும். அவற்றை அனுபவமாக எடுத்துக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். நான் எனது மூன்று பிள்ளைகளுடன் அமைதியான வாழ்க்கையொன்றை வாழ்ந்து வருகின்றேன் என கூறினார்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கடந்த 29ஆம் திகதி மீணடும் இலங்கைக்கு வந்த லுவிஸ் மேலும் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நான் இலங்கைக்கு வருகை தருவேன். எனினும், இந்த முறை கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இலங்கைக்கு மீண்டும் வருகை தர வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

என் மனைவியின் விருப்பத்திற்கு அமைய இரத்தினபுரி மருத்துவமனையின் மூன்றாவது மாடியை நிர்மாணித்து, அதன் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதோடு சிறுவர் பிரிவில் அவசர சிகிச்சை பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது

எனது மனைவிக்கு செய்யும் கௌரவமாக, அந்த மருத்துவமனை கட்டிடத் தொகுதிக்கு மோனிகா எலன் என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளேன் என லுவிஸ் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்