இருவருக்கு உயிர் கொடுக்கப்போகிறாள் எமலி: 5 மாத பிள்ளைக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் இளம் பெற்றோர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மூளைச்சாவு ஏற்பட்ட 5 மாத பிள்ளையின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருக்கும் மைக்கேல் அப்ராம்ஸ் - ஜேடன் ரோஸ் தம்பதியின் 5 மாத குழந்தைதான் எமலி.

10 மாதம் பல்வேறு கனவுகளுடன் குழந்தையின் வரவுக்காக காத்திருந்தனர் மைக்கேல் - ரோஸ். 5 மாதங்களுக்கு முன்பு அந்த அழகிய தேவதை பிறந்தாள்.

முதல் குழந்தை அதுவும் பெண் என உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் மைக்கேல். மகளின் ஒவ்வோர் அசைவுகளையும் இருவரும் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை எமலிக்கு திடீரென உடல்நலம் குன்றியது. சிறிது வாந்தி எடுக்கத் தொடங்கினாள் அதன்பின் சரியானது.

ஒருவாரம் கழித்து மீண்டும் வாந்தி எடுக்கத் தொடங்கினாள். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எவ்வளவுதான் பராமரித்தாலும் காலநிலை மாற்றம் சூழல்கள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். இப்படித்தான் மைக்கேல் - ஜேடன் இருவரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால், மருத்துவர்கள் சொன்ன தகவலோ இருவருக்கும் பேரிடியாக இறங்கியது. குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதாக அதிர்ச்சி கொடுத்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இளம்பெற்றோருக்கு இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. யோசிப்பதற்குக்கூட நேரமில்லை மார்பிலும் தோளிலும் தவழ்ந்த குழந்தை படுத்த படுக்கையாய் கிடக்கிறாள்.

குடியிருக்கும் தொகுப்பு வீடு நண்பர்கள் என அனைவரிடம் குழந்தையின் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுக்கு உதவி கோரினர். அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனால், குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எமலி இனி வரமாட்டாள். இந்தக் கடினமான நேரத்தில் மைக்கேலும் - ஜேடனும் எடுத்த முடிவு இரண்டு உயிர்களைக் காப்பாற்றவுள்ளது.

எமலி எங்கள் முதல் குழந்தை. அவளுடன் இருக்கும் வாய்ப்பை ஐந்து மாதங்கள் மட்டுமே பெற்றோம்.

எங்கள் முதல் குழந்தையின் வாழ்க்கையை மதிக்கிறோம். அவளது கிட்னி மற்றும் இதயத்தை தானமாக வழங்கவுள்ளோம்.

இரண்டு நோயாளிகள் இதைப் பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். அவள் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றவுள்ளார்.

எங்கள் மகளின் உடல் உறுப்புகளை அவர்கள் வைத்திருப்பதால், ஒரு நாள் நாங்கள் வந்து சந்திப்போம் என உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

குழந்தை எமலி இருந்த மருத்துவமனை அறையில் அவள் பயன்படுத்திய பொம்மைகள், அவளுக்குப் பிடித்த ஆடைகள் என அனைத்தும் வைக்கப்பட்டது.

உறவினர்கள் நண்பர்கள் என மருத்துவமனை முழுவதும் நிறைந்திருந்தனர். கண்ணீருடன் அவளை வழியனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்