23 வருடச் சிறைத்தண்டனை... கடிதத்தில் வளர்ந்த காதல்: சிறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் பீனிக்ஸைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து தற்போது திருமணம் செய்துள்ளார்.

பீனிக்ஸைச் சேர்ந்த நினா ஹோஃப்லெர் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாகத் தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு வாகன நிறுத்தத்தில் சந்தித்துள்ளார்.

அப்போது மைக்கேலுக்கு 17 வயது, நினாவுக்கு 16 வயது. முதல் சந்திப்பு நடந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்த நிலையில்,

ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

மைக்கேலிடம் மனதைப் பறிகொடுத்த நினா சிறைக்குச் செல்வதற்கு முன்பு கடிதம் எழுதுகிறேன் என உறுதியளித்துள்ளார்.

முதல் மூன்று வருடங்கள் இவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் கடிதம் மூலமே நடந்துள்ளன. இந்த இடைவெளியில் மைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது.

2012 ஆம் ஆண்டு முதன்முறையாக சிறையில் இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். அப்போது கிடைத்த முதல் முத்தம் இருவருக்கும் இடையே மேலும் நெருக்கத்தை உண்டாக்கியது.

அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. ஆனால் நினாவுக்கு ஒரு பயம் இருந்தது. தான் ஒரு தண்டனை கைதியைக் காதலிக்கிறேன் என்று வெளியில் சொன்னால் இந்தச் சமூகம் எப்படி நினைக்கும் எனப் பயந்தார்.

இதனால் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். தனது தாய் மற்றும் நெருங்கிய தோழி இவர்கள் இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.

இந்த நிலையில் மைக்கேல் தனது விருப்பத்தை 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நினாவிடம் தெரிவித்துள்ளார். மைக்கேல் விருப்பத்தைக் கேட்ட பின் நினாவுக்கு இருந்த கூச்சம் எல்லாம் காற்றில் பறந்தது.

தனது காதலையும் உணர்வுகளையும் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதனையடுத்து 6 மாத காத்திருப்புக்குப் பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இருவருக்கும் திருமணமானதால் தம்பதியர் 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில் சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்த்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார் நினா.

கலிபோர்னியா மாகாணத்தில் 2014 ஆம் ஆண்டு சிறைத் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த இளம் கைதிகளுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்படும்.

மைக்கேல் தற்போது 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனத் தனது வருத்தத்தை நினா தெரிவித்துள்ளார்.

மேலும், நான் அவருக்காகப் போராடுவேன் எனக் கூறும் நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்