விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த பெண்: மொத்த பயணிகளையும் வெளியேற்றிய விமானி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து புறப்பட தயாரான விமானம் ஒன்றில் திடீரென்று அத்துமீறி நுழைந்த பெண் பயணியால் அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாகியுள்ளது.

குறித்த பெண்மணியிடம் எந்த அடையாள அட்டைகளோ விமான பயணச் சீட்டோ காணப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெர்வித்துள்ளது.

ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டா நகருக்கு புறப்பட தயாராக இருந்துள்ளது டெல்டா விமான சேவை நிறுவனத்தின் அந்த விமானம்.

அப்போது திடீரென்று பெண் ஒருவர் விமானத்தில் அத்துமீறி நுழைந்து இருக்கை ஒன்றில் அமர்ந்துள்ளார்.

அவரிடம் விசாரித்ததில், பாஸ்போர்ட், விமான பயணச் சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை.

இதனையடுத்து அந்த பெண்மணியை விமானத்தை விட்டு வெளியேற வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர் வெளியேற மறுத்துள்ளதுடன், அந்த இருக்கையில் இருந்து நகரவும் மறுத்துள்ளார்.

இதனையடுத்து விமான ஊழியர்கள் அடையாள அட்டை காண்பிக்க கோரியுள்ளனர். ஆனால் அவர் தமது மொபைலில் பதிவு செய்யப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றை காண்பித்துள்ளார்.

விமானத்திற்குள் அத்துமீறி நுழைவது சட்ட விரோதம் என விமானி கண்டிப்பாக கூறியும் அவர் அதை கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து விமானி, விமான நிலைய பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்தே குறித்த பெண்மணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இதனிடையே அந்த பெண்மணி எஞ்சிய பயணிகளை சாபமிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த களேபரத்தால் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுமார் 3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை துல்லியமாக சோதனையிட்ட பின்னர், புறப்பட அனுமதி வழங்கியுள்ளனர்.

விமானத்திற்குள் அத்துமீறிய அந்த பெண்மணியை கைது செய்யவில்லை எனவும், விமான நிலையத்தில் இருந்து மட்டும் வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்