தொட்டிலில் குழந்தையின் அருகே படுத்திருந்த ஆவி: அதிர்ச்சியடைந்த தாய்க்கு தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க பெண் ஒருவர் இரவு உறங்கும்போது, தனது 18 மாத குழந்தையின் அருகில், ஒரு ’ஆவிக்குழந்தை’ படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இல்லினாய்சைச் சேர்ந்த Maritza Cibuls (32), தனது குழந்தையின் தொட்டிலில், குழந்தைக்கு அருகில் ஆவிக்குழந்தை ஒன்று படுத்திருப்பதை, அதன் அறையில் பொருத்தப்பட்ட கமெரா மூலம் தனது அறையிலிருந்த கணினியின் மானிட்டரில் கண்டுள்ளார்.

தூக்கக்கலக்கத்தில் தனக்கு அவ்வாறு தோன்றுவதாக எண்ணிய Maritzaவை அந்த உருவம் தூங்கவிடாமல் தொந்தரவு செய்ய, டார்ச் லைட் ஒன்றுடன் அந்த அறைக்கே துணிந்து சென்றிருக்கிறார் அவர்.

அங்கு சென்று பார்த்தால், வித்தியாசமாக எதுவும் இல்லை. அறைக்கு திரும்பி வந்தால், மீண்டும் மானிட்டரில் அதே உருவம்.

தூங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் ஒரு வழியாக இரவைக் கடத்தியிருக்கிறார் Maritza. மறு நாள் காலையில் எழுந்ததும், முதல் வேலையாக குழந்தையின் அறைக்கு சென்ற Maritza, குழந்தையை தூக்கிவிட்டு தொட்டிலை சோதித்திருக்கிறார்.

பிறகு, தான் பார்த்த ஆவி என்ன என்பது தெரியவர, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் Maritza.

உண்மை என்னவென்றால், குழந்தையின் தொட்டிலில் விரித்திருந்த துணியை எடுத்துப்பார்த்தால், அதற்கு அடியில் இருந்த மெத்தையில், ஒரு குழந்தையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அதைத்தான் கமெரா படம் பிடித்து, ஆவிக்குழந்தையாக காட்டியிருக்கிறது.

தான் எப்போதுமே மெத்தைக்கு ஒரு உறை போட்டுவிடுவதால், அந்த படத்தை நினைவில் வைக்கவில்லை என்றும், அன்று தனது கணவர் அந்த உறையை போட மறந்ததால், அந்த படம் கமெராவில் சிக்க, தான் அதை ஆவி என்று எண்ணி பயந்துவிட்டதாகவும் சிரிப்புடன் தெரிவிக்கிறார் Maritza.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்