நியூயார்க்கை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்தார் டிரம்ப்: உதவிக்கு இராணுவம் வரவழைப்பு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதையடுத்து அதை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு, ஹொட்டல்கள், விளையாட்டு அரங்கங்கள் முதலான பெரிய கட்டிடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றும் திட்டமும் உள்ளது.

நியூயார்க் நகர மேயர் Bill de Blasio, பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நகருக்கு இராணுவத்தை அனுப்பி உதவுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்பை கேட்டுக்கொண்டிருந்தார்.

நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு இருப்பதாகவும், மற்றொரு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகள் கொண்ட ஒரு முதியவர் வார்டு ஒன்றின் தரையிலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

நியூயார்க் கவர்னர் Andrew Cuomo நியூயார்க்கை பேரழிவு பாதித்த இடமாக அறிவிக்கும்படி அதிபர் ட்ரம்பை கேட்டுக்கொண்டார்.

அதாவது அப்படி அறிவித்தால், கொரோனாவை எதிர்கொள்வதற்காக மாகாணத்திற்கு ஏற்படும் செலவுகளில் 75 சதவிகிதம் வரை பெடரல் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவிலேயே நியூயார்க்கில்தான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

அங்கு 8,403 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, 46 பேர் உயிரிழந்துவிட்டனர். வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் மட்டுமே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 வரை உயர்ந்துவிட்டது.

நியூயார்க்கில், வெள்ளிக்கிழமை மட்டுமே, காலை 10 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையில் 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டார்கள்.

அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்