கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்

Report Print Santhan in அமெரிக்கா
1082Shares

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ‘உலகின் பொலீஸ்காரன்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, கொரோனா முன்னால் கதிகலங்கி நிற்பதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். உண்மையில், ட்ரம்ப் அரசின் தவறான முடிவுகள்தான் இந்த நிலைக்குக் காரணம்.

ஆரம்பம் முதலே அலட்சியம்

ஜனவரி 20-ல், சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்கா – சீனா இடையிலான முக்கியமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து பெயரளவில் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தது அமெரிக்கா. அதைத் தாண்டி, கொரோனா ஏற்படுத்தப்போகும் பேரழிவு தொடர்பான முன்னெச்சரிக்கை உணர்வு ட்ரம்ப் அரசிடம் இருக்கவில்லை.

கோவிட் -19 பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப, அமெரிக்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டார்கள்.

இத்தனைக்கும், கொரோனா வைரஸ் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே ட்ரம்ப் அரசுக்கு அமெரிக்க உளவுத்துறை அளித்துவிட்டது.

ஆனால், “நிலைமை முற்றிலுமாகக் கட்டுக்குள் இருக்கிறது. சீனாவிலிருந்து வந்த ஒருவருக்குத்தான் கொரோனா இருக்கிறது. மற்றபடி எல்லாம் நலமே” என்கிற ரீதியில் பேசிவந்தார் ட்ரம்ப்.

அதிகாரமும் பிடிவாதமும்

சரியோ தவறோ, ட்ரம்ப் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்றால், அதில் இறுதிவரை பிடிவாதம் காட்டுவார் என்பது அமெரிக்கர்கள் நன்கு அறிந்த விஷயம்தான்.

தான் சொல்வதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத அதிகாரிகளையே தன்னைச் சுற்றி அமர்த்திக்கொண்டிருப்பவர் அவர். அவர்களும் ட்ரம்ப் போலவே சிந்திப்பதால், விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் விஷயங்களைத் திருத்திக்கொள்ள அரசுத் தரப்பு விரும்புவதே இல்லை.

குறிப்பாக, கொரோனா விஷயத்தில் சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையை ட்ரம்ப் அரசு நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை. இதன் விளைவை அமெரிக்க மக்கள்தான் இன்றைக்கு எதிர்கொள்கிறார்கள்.

கோவிட் – 19 பாதிப்பால் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்கள் அவசியம்.

ஆனால், மார்ச் 15 நிலவரப்படி, கையிருப்பில் வெறும் 12,700 வென்ட்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

ஆனால், நம்மிடம் போதுமான வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று துணை அதிபர் மைக் பென்ஸ் சமாதானம் சொன்னார்.

எனினும், எத்தனை வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று அவர் சொல்லவே இல்லை. தவிர, வென்ட்டிலேட்டர்களை விநியோகிக்கும் விஷயத்தில் பல மாநிலங்களின் ஆளுநர்களுடன் மோதல் போக்கை அதிபர் ட்ரம்ப் கடைப்பிடித்தார்.

பல மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக, அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், “நம்மிடம் விரைவில் மருத்துவ உபகரணங்கள் உபரியாகவே இருக்கும்.

அவற்றை இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அனுப்ப முடியும்” என்று பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா எட்டிப்பார்த்த ஆரம்பக் கட்டத்தில், வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை டன் கணக்கில் சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்திருக்கும் விஷயம் வெளியாகியிருக்கிறது.

அதிகரிக்கும் மரணங்கள்

இப்படிப் பொறுப்பில்லாமல் ட்ரம்ப் அரசு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் நிலைகுலைய வைத்திருக்கிறது.

மார்ச் 28 கணக்கின்படி, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

பலி எண்ணிக்கையில், உலகிலேயே ஆறாவது இடம் அந்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. மார்ச் 30-ல், அமெரிக்காவில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை, 3,100-ஐக் கடந்தது. 2001 செப்டம்பர் 11-ல் உலக வர்த்தக மையக் கட்டிடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட இது அதிகம். இன்றைய தேதிக்கு 1.60 லட்சம் அமெரிக்கர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

2 லட்சம் மரணங்கள் ஏற்படும்

எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பரவலைக் கவனிக்க என்றே அரசால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயலாற்றினாலும்கூட, கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரித்திருப்பது அமெரிக்கர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இன்றும்கூட, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை பெரிய பிரச்சினை அல்ல என்று பேசி வருகிறார் ட்ரம்ப்.

ஆனால், கள நிலவரம் வேறு என்று வாதிடுகிறார்கள் பல மாநில ஆளுநர்கள். சொல்லப்போனால், பிப்ரவரி இறுதிவரை கூட கொரோனா பரிசோதனை விஷயத்தில் ட்ரம்ப் அரசு மிகுந்த அலட்சியத்துடன்தான் நடந்துகொண்டது.

கொரோனா பரிசோதனைக்காக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention- CDC) உருவாக்கிய உபகரணங்கள் குறைபாடு கொண்டவை என்று தெரியவந்தது.

ஆனாலும், அந்த உபகரணங்களைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பு காட்டியது ட்ரம்ப் நிர்வாகம்.

சுகாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்த பின்னரே, பொதுச் சுகாதார நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து, மேம்படுத்தப்பட்ட பரிசோதனை உபகரணத்தை உருவாக்கலாம் எனும் முடிவுக்கு ட்ரம்ப் அரசு வந்தது.

இன்னமும் இவ்விஷயத்தில் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் புலம்புகிறார்கள்.

மேலும் சறுக்கல்கள்

ஏற்கெனவே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, போதுமான சமூக விலக்க நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசு எடுக்கவில்லை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அந்நடவடிக்கைகளை மேலும் குறைக்கவே விரும்புவதாகப் பேசினார் ட்ரம்ப்.

சமூக விலக்கத்தால் கொரோனா பரவலைவிட அதிக மரணங்கள் ஏற்படும் என்றே அவர் பேசிவந்தார். எனவே, ஒரு சில வாரங்களிலேயே அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் திறக்கப்படும் என்றார்.

ஆனால், அப்படிச் செய்வது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பைத்தான் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

இன்றைக்கு, கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவரே, ஏப்ரல் 30 வரை சமூக விலக்கத்தைத் தொடர்வது என்று முடிவெடுத்திருக்கிறார். இன்றைய திகதிக்கு, அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் வீட்டில் அடைபட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளை மாளிகை முன்பு தினமும், கொரோனா வைரஸ் பரவல் குறித்துப் பேசி வரும் ட்ரம்ப், இவ்விஷயத்தில் தனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற, கேள்வி கேட்கின்ற பத்திரிகையாளர்களை வெளிப்படையாகவே கடிந்துகொள்கிறார்.

“விமர்சனபூர்வமான கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, அரசுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் நீங்கள்” என்று பிபிஎஸ் எனும் செய்தி ஊடகத்தின் நிருபரிடம் கண்டிப்புடன் கூறியிருக்கும் ட்ரம்ப்புக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஆரம்பத்திலிருந்தே கொரோனா விஷயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ‘வல்லர’சின் நிலை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்பதுதான் ட்ரம்ப் அரசின் நிர்வாகக் குறைபாடுகள் உலகுக்குச் சொல்லும் பாடம்!

- Thehindu

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்