கொரோனா அச்சுறுத்தல்: அமெரிக்காவை விட்டு வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள்! உதவ முன்வராத டிரம்ப் அரசு

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்கள், நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்கா நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் H-1B விசா மூலம் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

இதில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு வருடத்துக்குப் பல ஆயிரக்கணக்கானோர் வேலைக்குச் செல்கின்றனர்.

அங்கு குறிப்பிட்ட துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 47 மில்லியன் பேர் வேலைகளை இழந்து தவிக்கின்றனர்.

இதில், வைலையை இழந்த அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு உதவ அதிபர் டிரம்ப் முன்வந்துள்ளார். ஆனால், அந்த உதவி H-1B விசா உள்ளவர்களுக்கு கிடைக்காது.

டரல் சட்டத்தின்படி, H-1B விசா மூலம் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் அந்நாட்டில் தங்கள் வேலைகளை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாள்களுக்குள் அந்த நாட்டை விட்டுத் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேற வேண்டும்.

அந்தச் சட்டத்தின்படி, இப்போது அமெரிக்காவில் தங்கள் வேலைகளை இழந்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்நாட்டை விட்டு 60 நாள்களுக்குள் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று மிகத் தீவிரமடைந்திருக்கும் இந்த நிலையில் தங்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது முறையல்ல. மேலும், வேலைகளை இழந்த பின்பு தங்குவதற்கான 60 நாள் உச்சவரம்பை 180 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமெரிக்க அரசிடம் முன் வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது, வெள்ளை மாளிகைக்கு H-1B விசா மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 20,000 பேரின் கையொப்ப படிவங்கள் மட்டுமே கோரிக்கையாக அனுப்பப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 1,00,000 கையொப்ப கோரிக்கைகள் பெறப்பட்டால் மட்டுமே வெள்ளை மாளிகை தரப்பில் அந்தக் கோரிக்கையை ஏற்று உதவ முடியும் என்ற கருத்தும் அங்கு பரவலாகப் பேசப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்