ஊரடங்கால் இந்தியாவில் சிக்கிய அமெரிக்க நடிகர்: மகனுடன் பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதாக கவலை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

மருத்துவ சிகிச்சைக்காக மகனுடன் இந்தியா சென்றுள்ள பிரபல அமெரிக்க நடிகர் ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல், உயிர் வாழ தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் குடியிருந்து வருபவர் 66 வயதான ஜெஃப்ரி கியுலியானோ. இவர் ஸ்கார்பியன் கிங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமது 12 வயது மகன் ஈடனுடன் கடந்த மார்ச் 3 ஆம் திகதி மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்.

மகனுக்கு தாஜ்மஹால் காணவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவும், தமக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம்.

இதனையடுத்து இரண்டு வார கால விடுமுறையில் இந்தியா சென்றுள்ளனர். இந்த நிலையில் மார்ச் 18 ஆம் திகதி கொரோனா பரவலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்திய அரசு எல்லைகளை மூடியதுடன், சர்வதேச விமானங்களையும் ரத்து செய்தது.

தற்போது நீளும் இந்த ஊரடங்கில் சிக்கிக்கொண்ட ஜெஃப்ரி, உணவுக்காக திண்டாடும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரகத்தை நாடி தமக்கு நாடு திரும்ப முடியும் என தெரிவித்துள்ள ஜெஃப்ரி, ஆனால் தமது மகன் ஈடன் தாய்லாந்து குடிமகன் என்பதால், அவரை தம்முடன் அழைத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது என்றார்.

இந்தியா செல்லும் போது, தாம் வெறும் 2,000 டொலர் மட்டுமே எடுத்துச் சென்றதாகவும், அது மருத்துவச் செலவுக்கும் இரண்டு வார காலம் தங்கிச் செல்லவும் போதுமானதாக இருக்கும் என கருதியதாகவும்,

ஆனால் ஊரடங்கால் தற்போது தாம் தெருவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். மட்டுமின்றி, உடனே நியூயார்க் திரும்பும் திட்டம் இருந்ததால், வங்கி கடன் அட்டைகள் உள்ளிட்ட எதையும் தாம் கைவசம் வைத்திருக்கவில்லை என்கிறார் ஜெஃப்ரி.

திரைப்பட நடிகராக வலம் வந்தாலும் ஜெஃப்ரி இதுவரை 32 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்