டிரம்ப் பேச்சைக் கேட்டு 17 வயது மகளை பறிகொடுத்த தாயார்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் தாயார் ஒருவர் கொரோனா பாதித்த தமது இளம் வயது மகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்த மருந்துகளை வழங்கியதால் அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் புளோரிடா முழுமைக்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

புளோரிடாவின் ஃபோர்ட் மியர்ஸ் பகுதியை சேர்ந்தவர் பயிற்சி பெற்ற செவிலியரான கரோல் டேவிஸ்.

இவரது மகள் கார்சின் லே டேவிஸ் தமது 17-வது பிறந்தநாளை கொண்டாடிய இரண்டு நாளுக்கு பின்னர், ஜூன 23 ஆம் திகதி கொரோனாவுக்கு பலியானார்.

ஃபோர்ட் மியர்ஸ் பகுதியில் மிக இளம் வயதில் கொரோனாவுக்கு பலியானவரும் இவரே. கார்சின் சிறு வயதிலேயே புற்றுநோய் மற்றும் உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட்டு வந்தவர்.

இதனால் கொரோனாவில் இருந்து அவரை பாதுகாப்பது மிக சவாலான விடயம் என்பது செவிலியரான தாயாருக்கு தெரிந்திருந்தும்,

அடிப்படைவாத கிறிஸ்தவர்களின் குடும்பத்திலிருந்து வந்த கரோல் டேவிஸ் தமது மகளுடன், ஜூன் 10 அன்று ஒரு தேவாலய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வின் மூன்றாவது நாள் கார்சினுக்கு நோய் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. ஆனால் இது வெறும் குளிர் ஜுரம் என்று தாயார் கரோல் உதாசீனம் செய்துள்ளார்.

தொடர்ந்து நிலை மோசமடையவே, ஜனாதிபதி டிரம்ப் முதன்முதலாக பரிந்துரைத்த Zithromax என்ற மருந்தை மகளுக்கு அளித்துள்ளார்.

இருந்தும் குணமாகாமல் போகவே, ஜூன் 19 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் பரிந்துரைத்த மலேரியாவுக்கான மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மகளுக்கு அளித்துள்ளார்.

அதுவும் பலன் தராமல் போகவே, நாளுக்கு நாள் மோசமடையும் மகளின் நிலையை கருத்தில் கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவர்களிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிக அளவுக்கு வழங்க இவர் பரிந்துரைக்க, அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கரோல் டேவிஸ், தமது பேஸ்புக் பக்கத்தில் மருத்துவர்களுக்கு எதிராக கருத்து பதிவு செய்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் சிறுமிக்கு செயற்கை சுவாசத்தை கொடுக்க முயன்றபோது, பெற்றோர் அதை செய்ய மறுத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது மகள் கார்சின் இறந்துவிட்டார்.

இதனிடையே, கரோல் டேவிஸ் தடுப்பூசிக்கு கடுமையான எதிர்ப்பாளர் என்பதும், ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பதும் பின்னர் தெரியவந்தது.

மகளின் தீவிர அவஸ்தை கூட கரோலின் மனதை மாற்றவில்லை. கார்சின் இறப்பதற்கு முந்தைய நாள், இணையதளம் ஒன்றில் மாஸ்க் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரோல் விளம்பரம் செய்துள்ளார்.

வெறும் 17 வயதான கார்சினின் இறப்பு அமெரிக்க மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. பலர் தாயார் கரோலுக்கு எதிராக பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.

கரோல் டேவிஸ் பல விரோதங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார், இறுதியாக அவர் தனது பேஸ்புக் கணக்கை முடக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்