வெளிநாட்டில் கொல்லப்பட்ட இளம் தாயார்... இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம்: கணவன் சிக்கியதன் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு மரணமடைந்த செவிலியர் மெரின் ஜாய், தாம் இறக்கும் முன்னர் பொலிசாரிடம் மரண வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றுயிராக மீட்கப்பட்ட இந்திய செவிலியிர் மெரின், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே, பொலிசாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதில் தம்மை தாக்கியது கணவர் பிலிப் எனவும், அவரது இன்னொரு பெயர் நெவின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பணி நேரம் முடித்து சக ஊழியர்களிடம் விடைபெற்று குடியிருப்புக்கு திரும்ப வாகனம் நிறுத்தும் இடத்திற்கு சென்றவரை மறைந்திருந்த கணவன் பிலிப் கத்தியால் கண்மூடித்தனமாக 17 முறை தாக்கியுள்ளார்.

தொடர்ந்தும் ஆத்திரம் அடங்காமல் தமது வாகனத்தால் மனைவியை மோதித் தள்ளிவிட்டு மாயமாகியுள்ளார்.

ஆனால், மெரின் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்த சில மணி நேரத்தில் ஹொட்டல் அறை ஒன்றில் பதுங்கியிருந்த பிலிப்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2016 ஜூலை 30 அன்று பிலிப் மற்றும் மெரின் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடித்த இரண்டு ஆண்டுக்குள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு தலைதூக்கியுள்ளது.

2018 ல் மெரினை கொலை செய்து தாம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதை அடுத்து, பொலிசாரின் உதவியை நாடியுள்ளார் மெரின்.

உளவியல் காரணங்களால் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவில் பிலிப் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பிலிப் மற்றும் மெரின் கேரளா வந்த போது, இந்த விவகாரம் பெற்றோரிடம் மெரின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தெரியவந்த பிலிப், 10 நாட்களுக்குள் அமெரிக்கா திரும்பியுள்ளார். தொடர்ந்து தனியாகவே தங்கி வந்துள்ளார்.

மட்டுமின்றி வாகன எரிபொருள் நிலையம் ஒன்றில் கணக்கராகவும், துரித உணவகம் ஒன்றில் ஊழியராகவும் பிலிப் பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால் தமது கணவர் பிலிப்பின் அருகாமையில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர வேண்டும் என மெரின் பல நாட்களாக முயன்று வந்துள்ளார்.

இதனிடையே ஜூலை 19 ஆம் திகதி உள்ளூர் பொலிசாரை தொடர்பு கொண்ட மெரின், விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் குற்றவியல் நடவடிக்கை ஏதும் இதுவரை பதிவாகாத நிலையில், உரிய சட்ட ஆலோசனை பெற பொலிசார் பரிந்துரைத்துள்ளனர்.

மெரின் விவாகரத்துக்கு முயல்வதை அறிந்த பிலிப் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி தங்களது 2 வயது குழந்தை தொடர்பிலும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, செவ்வாய் பகல் உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் கார் பார்க்கில் மறைந்திருந்த பிலிப், கத்தியால் மெரினை கொடூரமாக தாக்கியுள்ளார்.

மெரினின் அலறல் சத்தம் கேட்டே சக ஊழியர்கள் சம்பவயிடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

அவசரப்பிரிவு அருகே சம்பவம் நடந்திருந்தாலும், செவிலியர் மெரின் குற்றுயிராக காணப்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் பகல் 8.51 மணிக்கு மெரின் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்