2060-ஆம் ஆண்டில் கொரோனாவைப் போலவே ஏராளமான மக்கள் இறக்கலாம்! எதற்காக? எச்சரிக்கும் பில்கேட்ஸ்

Report Print Santhan in அமெரிக்கா

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் கொரோனாவை விட காலநிலை மாற்றம் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் மிகப் பெரிய கொடிய நோயாக மாறியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகள், எப்படி இந்த நோயை விரட்டுவது, பரவலை தடுப்பது என்று போராடி வருகிறது.

இந்த நோய்க்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என்று நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியிலும், பிரித்தானியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற இன்னும் பல நாடுகள் இறங்கியுள்ளன.

இதனால் விரைவில் தடுப்பூசி வந்துவிடும், நாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்று மக்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனாவைவிட காலநிலை மாற்றத்தால் உருவாகும் ஆபத்து பெரிய அளவில் இருக்கும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு குறைந்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர்.

ஆனால், சர்வதேச எரிசக்தி நிறுவனம் 8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது ஒரு அர்த்தமுள்ள குறைப்பாகப் பார்க்கப்படுகிறது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குறைவு விகிதத்தைத் தொடர முடிந்தால் நாம் சிறந்த நிலையில் இருப்போம்.

துரதிர்ஷ்டவசமாக நம்மால் அதைச் செய்ய முடியாது. ஏனெனில் இந்த குறைவிற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் கார், விமானம், வாகனங்கள் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆனால், இந்த சூழலை மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே நாம் கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டைக் கட்டுப்படுத்த தவறினால், கொரோனாவுக்கு இணையான மற்றொரு பேரழிவை சந்திக்க நேரிடும்.

காலநிலை மாற்றத்தால் புவியின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது, 2060-ஆம் ஆண்டில் கொரோனாவைப் போலவே அதிகளவில் மக்கள் இறக்க நேரிடலாம்.

2100-வது ஆண்டில் இந்த மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது கொரோனாவால் ஒரு லட்சத்துக்கு 14 பேர் என்ற கணத்தில் உயிரிழப்பு பாதிப்பு ஏற்படுகிறது.

அதுவே காலநிலை மாற்றத்தால் அதிகபட்சம் ஆனால் ஒரு லட்சத்துக்கு 73 உயிரிழப்புகளும், குறைந்தபட்சமாக ஒரு லட்சத்திற்கு 10 பேர் வரை உயிரிழக்க நேரிடும்

இதனால், கொரோனாவைவிடக் காலநிலை மாற்றம் மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்போது இருக்கும் ஆபத்து பெரியதுதான், அதே நேரம் நாளைய ஆபத்து குறித்தும் அந்தந்த நாடுகள் முறையாகத் திட்டமிடுவது அவசியமான ஒன்று என கூறியுள்ளார்

.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்