இது மட்டும் நடந்தால் நான் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவேன்: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் சூளுரை

Report Print Karthi in அமெரிக்கா

சர்வதேச அரசியலை தீர்மானிக்கக்கூடிய அமெரிக்காவின் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தலில் ஒரு வேளை தான் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என டிரம்ப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் களம் இறங்கியுள்ளார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

அமெரிக்கா கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பதால் இந்த தேர்தல் டிரம்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொரோனா தொற்றினை அரசியலாக்கி வருவதை எதிர்க்கும் விதமாக, குடியேற்றம், இனம் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பிடெனை ஊழல்வாதி என்றும் டிரம்ப் விமர்சித்து வருகின்றார்.

இதில் ஒருபடி மேலே சென்று, பிடன் குடும்பம் ஒரு குற்றவியல் நிறுவனம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவை ஒரு கம்யூனிச நாடாக மாற்ற விரும்புகிறார்கள் என்றும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தோரை குறிப்பிட்டு, நமது சமூகங்களை சட்டவிரோத வெளிநாட்டினர், போதைப்பொருள், குற்றங்கள் ஆகியவற்றால் நிரப்புவார்கள் என்றும் லத்தீன் அமெரிக்க மக்களின் குடியேற்றம் குறித்தும் அவர் வெள்ளிக்கிழமை இரவு ஜோர்ஜியாவின் மாகானில் ஆரவாரமான கூட்டத்தினரிடம் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் மிச்சிகனில் பிரச்சாரம் செய்த ஜோ பிடன்,கொரோனா தொற்று குறித்து டிரம்பினை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“டிரம்ப் கொரோனா தொற்று மயமாக மறைந்துவிடும் என கூறி வருகிறார். ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட கொரோனா மிக ஆபத்தானதாக உருவெடுத்து வருகின்றது.” என பிடன் கூறியுள்ளார்.

மேலும், தொற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாக தோல்வியையும், தீவிர வலதுசாரி குழுக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகளுடன் டிரம்ப் கடைப்பிடித்து வரும் சுமுக போக்கையும் பிடன் விமர்சித்துள்ளார்.

"நாங்கள் பயத்தின் மீது நம்பிக்கையையும், பிரிவின் மீது ஒற்றுமையையும், புனைகதைக்கு மேலான அறிவியலையும், பொய்களின் மீதான உண்மையையும் தேர்வு செய்கிறோம்." என்றும் பிடன் கூறியுள்ளார்.

இரு வேறு வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவது, அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்