அதிக இந்தியர்கள் களம் காணும் அமெரிக்க பொதுத்தேர்தல்: யார் யாருக்கு வாய்ப்பு?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
299Shares

நடைபெறவிருக்கும் அமெரிக்க பொதுத்தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3ல் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஐந்து பேர் எம்.பி.,க்களாக உள்ளனர்.

'சமோசா காகஸ்' என இந்தக் குழுவுக்கு எம்.பி.,யான ராஜா கிருஷ்ணமூர்த்தி செல்லப் பெயர் வைத்துள்ளார்.

இந்தியாவில் பிரபலமான உணவு வகையான சமோசாவை குறிக்கும் வகையில் சமோசா காகஸ் என்று அவர் பெயரிட்டுள்ளார்.

செனட் எம்.பி.,யாக உள்ள கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். பிரதிநிதிகள் சபையில் டாக்டர் அமி பேரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் உள்ளனர்.

டாக்டர் அமி பேரா ஐந்தாவது முறையாகவும், ரோ கன்னா, மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகின்றனர்.

பிரதிநிதிகள் சபையின் ஒரே இந்திய பெண்ணான பிரமிளா ஜெயபால், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் செனட் எம்.பி.,யாகவும் மற்ற நான்கு பேர் பிரதிநிதிகள் சபை எம்.பி.,யாக மீண்டும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், மேலும் சில இந்தியர்களும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹிரால் திபிர்னேனி, அரிசோனா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார்.

டெக்சாஸ் மாகாணத்தில், முன்னாள் அரசு அதிகாரியான ஸ்ரீ பிரஸ்டான் குல்கர்னி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த இவர், இம்முறை வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செனட் சபைக்கு மைனேயில் இருந்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் சாரா கிடியான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிகவும் வலுவான சூசன் கோலின்ஸ்க்கு எதிராக அவர் முன்னிலையில் உள்ளார். இவர்களைத் தவிர, மேலும் சில இந்தியர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஆனால், அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்