டிரம்புக்காக கோடிகள் கொட்டிக் கொடுத்த நபர்: பணத்தை மொத்தமாக திருப்பி கேட்டு வழக்கு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பில் பல கோடிகள் நன்கொடையாக அளித்த ஆதரவாளர் ஒருவர் பணத்தை திருப்பிக் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தாமே இரண்டாவது முறையாகவும் வென்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

தேர்தல் முறைகேடு தொடர்பில், நீதிமன்ற போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும், இறுதியில் தாமே வெல்ல இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பான செலவீனங்களுக்காக ஆதரவாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியும் டொனால்டு டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக்கட்சி முன்னெடுத்தது.

Fredric Eshelman

அதில், ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளரான ஃப்ரெட்ரிக் எஷெல்மேன் என்பவர் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கும் தனியார் அமைப்பு ஒன்றிற்கு மொத்தமாக 2.5 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கியிருந்தார்.

தற்போது, குறித்த மொத்த தொகையையும் திருப்பித் தருமாறு கேட்டு, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தேர்தல் முறைகேடு விவகாரம் தொடர்பில் இழுபறியில் முடிந்த 7 மாகாணங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்திருந்த அந்த அமைப்பு தற்போது, வழக்கில் இருந்து விலகியதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த தனியார் அமைப்பானது தற்போது தேர்தல் முறைகேடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகியுள்ளதாகவும், தமது தொலைபேசி அழைப்புகளையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே, எஷெல்மேன் நீதிமன்ற புகாரை கைவிட்டால் ஒரு மில்லியன் டொலர் தொகையை திருப்பித்தர நிர்வாகம் தயாராக இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், மொத்த தொகையும் தமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் எஷெல்மேன் உறுதியாக உள்ளார் என்றே கூறப்படுகிறது.

இதுவரையில் தேர்தல் முறைகேடு தொடர்பில் டிரம்ப் தரப்பு தொடுத்திருந்த 38 நீதிமன்ற வழக்குகள் போதிய ஆதாரம் இல்லை என தெரிவித்து நீதிமன்றங்களால் புறந்தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்