அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை வெளிநாட்டு சதியா? சந்தேகத்தை கிளப்பும் பண பரிமாற்றம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
805Shares

அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு முன்னர் குறிப்பிட்ட சிலருக்கு 5 லட்சம் டொலர்கள் பிட்காயின் முறையில் பரிமாற்றம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற கட்டிடம் முற்றுகை இடப்பட்டதுடன், கலவரமும் வெடித்தது.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு 5 லட்சம் டொலர்களுக்கும் மேலான தொகை பிட்காயின் முறையில் அனுப்பப்பட்டிருப்பதாக Chainalysis எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chainalysis நிறுவனத்தின் பிளாகில் வெளியான தகவலின்படி பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் 28.15 பிட்காயின்களை நன்கொடையாக அனுப்பியிருப்பதாகவும், ஒரே பரிவர்த்தனையில் இப்பணம் கைமாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Chainalysis நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய தகவல்களை இந்நிறுவனம் திரட்டி வருகிறது. இதன்படி 22 வித்தியாசமான கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் சமூக வலைத்தள மற்றும் இணையதள பிரபலங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வளவு தொகையினையும் பிரான்சை சேர்ந்தவர் அனுப்பியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பரிவர்த்தனையில் Nick Fuentes என்பவருக்கு அதிகபட்சமாக 2,50,000 டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு பேச்சு காரணமாக யூடியூபரான Nick Fuentes-ன் பக்கத்தை யூடியூப் அண்மையில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்