அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் ஆபத்தான ஆயுதங்களுடன் சிக்கிய நபரால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவுக்கு அச்சுறுத்தல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆயுததாரியான அந்த நபர், எதிர்வரும் புதன்கிழமை நடக்கவிருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமக்கு சிறப்பு அனுமதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபர் வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மிக அருகாமையில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி வழியாக செல்ல முயன்றுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார், அவரிடம் இருந்து தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கி ஒன்றும், 500 சுற்று தோட்டாக்களும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி பதவியேற்பு விழாவுக்கான போலி ஆவணங்களும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜனவரி 6 ம் திகதி டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற முற்றுக்கை மற்றும் கலவரம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடர்பில் தேசிய பாதுகாப்புப் படையினரை தலைநகரில் குவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி அனைத்தும் தற்போது தேசிய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 72 மணி நேரத்தில் 130 விமானங்களின் உதவியுடன் சுமார் 7,000 தேசிய பாதுகாப்புப் படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும், வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.