அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்! இதை முடிவு கட்ட வேண்டும் என உறுதி

Report Print Santhan in அமெரிக்கா
201Shares

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இனி பணியாற்றுவதற்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைய, ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபருக்கான பதவியேற்பு விழா இன்று Capitol Hill-ல் நடைபெற்றது.

இதையடுத்து அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜோ பைடன் தனது குடும்ப பைபிள் சாட்சியாக பதவியேற்றார். இந்த பைபிள் 127 ஆண்டுகள் பழமையானது.2009 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்றுதான் அவர் துணை அதிபராக பதவியேற்றார்.

செனட் சபை உறுப்பினராக பதவியேற்ற போதும், இதே பைபிள் சாட்சியாகவே அவர் பதவியேற்றார்.

பதவியேற்பின் போது, இது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயகத்தின்நாள். அமெரிக்க வரலாறு பல்வேறு போராட்டங்கள் நிறைந்தது. அமெரிக்காவில் பல அழுத்தங்களை கடந்து மக்களாட்சி நீடித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் தான் மக்களாட்சியை வன்முறை ஆட்டி படைத்தது. கொரோனா வைரஸ் ஏராளமான மக்களின் உயிரை பறித்துள்ளது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன.

நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெருந்தொற்று, வன்முறைகள் போன்றவற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி, பாதுபாப்பை முன்னேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன் இருந்தால் எந்த காலத்திலும் நாம் தோற்கமாட்டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலைக்காது. அமெரிக்க மக்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வெள்ளையின வாதம், உள்நாட்டு பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மார்டின் லூதர் கிங்கின் கனவுகளை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், இணக்கமாவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இனி பணியாற்றுவதற்கான நேரம் என்று தன்னுடைய பணிகளை துவங்கிவிட்டார்.
மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்