அமெரிக்காவின் துணை அதிபர்! நான் இந்த நிலைக்கு வர காரணம் இவர் தான்! கமலா ஹாரிஸ் பேசிய உருக்கமான வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா
1887Shares

அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், தான் இந்த நிலைக்கு வர காரணம் யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

இன்று துணை அதிபராக பதவி ஏற்ற அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், அவர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்த ஒரு பெண்ணைப் பற்றி பேசப்போகிறேன்.

அது எனது தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ். எப்போதுமே அவர் எங்கள் இதயத்தில் நிறைந்திருக்கிறார். 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எனது தாய் வந்தபோது, அவர் மகள், இந்த நாட்டின் துணை அதிபராக பதவி ஏற்பார் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் அமெரிக்கா என்ற இந்த நாட்டில் இதுபோன்ற சாதனை சாத்தியப்படும் என்பதை அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

நான் இந்த நேரத்தில் எனது தாயை நினைவு கூறுகிறேன். தலைமுறை தலைமுறையாக பாடுபடும் பெண்களை நினைவு கூறுகிறேன்.

கருப்பின பெண்கள், ஆசிய பெண்கள், வெள்ளை இனப் பெண்கள், லத்தீன் இனப் பெண்கள், அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பெண்கள் என இந்த நாட்டின் வரலாறு முழுவதும் நிறைந்து காணப்பட கூடிய பெண்கள் அனைவரையும் நான் இந்த நல்ல தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டம் மற்றும் தியாகத்தின் மூலம் பெண்களுக்கு, சமத்துவம், சுதந்திரம், அனைவருக்குமான நீதி ஆகிவற்றை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கருப்பின பெண்களுக்கும் சேர்த்து இந்த உரிமைகளை அவர்கள் ஈட்டித் தந்துள்ளனர். கருப்பினப் பெண்கள் நமது ஜனநாயகத்தில் முதுகெலும்பாக இருந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாகப் போராடி பெண்களுக்கு வாக்குரிமை பெற்று தந்த அனைத்து பெண்களும் மற்றும் இன்னமும் கூட தங்களது அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்குமான பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன்.

அவர்களது உறுதியான நோக்கம், அவர்களது விடாப்பிடி குணம் ஆகியவற்றால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களின் தோள் மீது நான் இப்போது ஏறி நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்