கடல் மட்ட உயர்ந்து வருகிறது: செயற்கைக்கோள்களின் மூலம் கண்டுபிடிப்பு

Report Print Kabilan in காலநிலை

பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்தில் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கொலாராடோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 1993ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடல் மட்டம் எந்த அளவு இருந்துள்ளது, தற்போது எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

செயற்கைக்கோள்கள் மூலம் செய்யப்பட்ட இந்த ஆய்வில், கடந்த 25 ஆண்டுகளில் கடல் மட்டம், 7 செண்டி மீட்டர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வழக்கமாக இந்த ஆய்வு அலைகளின் அளவை வைத்தே மேற்கொள்ளப்படும்.

பசுங்குடில் வாயுக்களின் அதிகப்படியான வெளியேற்றத்தால், பூமியின் வளிமண்டலம் வெப்பமடைந்து வருகிறது. இதனால் கடல்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி, கடலின் நீர் மட்டம் அதிகரிக்கிறது.

ஆண்டிற்கு 3 மில்லி மீட்டர் எனும் அளவில், கடல் மட்டம் உயருவதாக இருந்தாலும் இது நிலையான உயர்வு அளவு அல்ல என்று கூறப்படுகிறது.

ஏனெனில், கிரீன்லேண்ட் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இருக்கும் கடல்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள், மிக வேகமாக உருகி வருவதால் கடல் மட்டத்தின் உயர்வு துரிதகதியில் நடப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, 2100ஆம் ஆண்டில் 60 செண்டிமீட்டர் வரையிலும், கடல் மட்டம் உயரலாம் என்று கூறப்படுகின்றது.

மேலும், இந்த நீர் மட்டம் 65 செண்டிமீட்டர் வரை உயர்ந்தால், கடலோரமாக இருக்கும் நகரங்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும்.

அதனுடன் உயர் அலைகள், வலுவான புயலால் ஏற்படும் கடல் சீற்றம் என இந்த பாதிப்பு பன்மடங்காகும் ஆபத்து உள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்