அண்டார்டிக் தீபகற்பத்தில் இந்த ஆண்டு(2020) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை பதிவாகியுள்ளதாக சாண்டியாகோ டி சிலி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் தொடர்ந்து பசுமை இல்ல வாயுவின் அதிக அளவிலான வெளியேற்றத்தின் காரணமாக பூமி சூடாகி வருவதாக பல சூழலியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 35.6 லிருந்து37.4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அண்டார்டிக் தீபகற்பத்தில் பதிவாகியுள்ளது. இது கடந்த முப்பது ஆண்டு கால வெப்பநிலையைவிட அதிகமானதாகும்.
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சாண்டியாகோ டி சிலி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த வெப்பநிலையானது வழக்கத்தினை விட 2 டிகிரி அதிகம் என சூழலியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளாக அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு பகுதியின் வெப்பநிலை ‘0‘ டிகிரி என இருந்து வந்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறன வெப்பநிலை அதிகரிப்பானது சூழலியலுக்கு ஏற்றது அல்ல என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதற்கு மாறாக தெற்கு பகுதியில் வெப்பநிலையானது மிகவும் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகின்றது.