காட்டில் தனிமை....கலங்கும் பெண்கள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

மாதவிடாய் காலங்களில் தனிமையில் காட்டுக்குள் தங்கவைக்கப்படும் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய காரணத்தால் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர்.

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மூணாரில் முதுவன் இன மக்கள் வசிக்கின்றனர்.

எடமலைக்குடி இவர்களின் ஊர், காடும், காடு சார்ந்த வாழ்க்கையுமாக இருக்கிறார்கள் இந்த ஆதிவாசி மக்கள்.

என்னதான் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கைதான் என்றாலும், அந்த இயற்கையே இவர்களது வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது.

பெண்கள் பூப்பெய்தியதும் காட்டின் ஓரத்தில் ஒரு குடிசை அமைக்கப்பட்டு அங்கு தங்கிவிடுகிறார்கள், இவர்களுக்கு தேவையான உணவினை பெண்களே கொண்டு சென்றுபோய் கொடுப்பார்கள்.

இந்த குடிசையின் பெயர் வலைமபுரா. மாதவிடாய் நாட்களில் பெண்கள் அசுத்தமானவர்கள் என்று கூறப்படுவதால் இவ்வாறு துயரங்களை சந்திக்கிறார்கள். தனிமையில் தங்குவது ஒரு கொடுமை என்றால் விலங்கினங்களின் துன்புறுத்தல்களுக்கு சில பெண்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

இப்படி அசுத்தமான சூழ்நிலையில் வெளிப்புறத்தில் தங்குவதற்கு அச்சம் கொண்ட பெண்கள், மாதவிலக்கை தடை செய்து கொள்வதற்காக மாலா டீ கருத்தடை மாத்திரயை பயன்படுத்துகிறார்கள்.

பிரச்சனையே இந்த மாத்திரையால் தான் ஆரம்பிக்கின்றன, இந்த மாத்திரையால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மஞ்சு என்ற 28 வயது பெண் கூறியதாவது, மாதவிலக்கு காலங்களில் காட்டுக்குள் தனிமையில் தங்குவதை தடுப்பதற்காக நான் மாலா டீ கருத்தடை மாத்திரையை பயன்படுத்தினேன்.

திருமணம் முடிந்த பின்னர், எனது கணவரிடம் அந்த மாத்திரையை வாங்கிவரச்சொல்லி பயன்படுத்தினேன்.

அதன் விளைவால் எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை, எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்ற பல பெண்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன.

ரு காலத்தில் முதுவன் இன குடும்பங்களில் குழந்தைச்செல்வங்களுக்குக் குறைவிருக்காது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு குழந்தைகள் ஓடியாடிக் கொண்டிருக்கும்.

இம்மக்களின் ஜனத்தொகை தாறுமாறாக ஏறிக்கொண்டிருப்பதை அறிந்த கேரள அரசு, தொண்ணூறுகளில் மாலா டி மாத்திரையை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

இது மாதவிலக்கைத் தடுப்பதை பயன்படுத்தி உணர்ந்த குடும்பப் பெண்கள், வயதுக்கு வந்த தங்கள் மகள்களுக்கும் இந்த மாத்திரையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். வெகு விரைவிலேயே இம்மாத்திரை வெகுவாக பிரபலமாகிவிட்டது.

இதற்கான ‘டிமாண்ட்’ அதிகரிக்க, ரோட்டோர டீக்கடையிலேயே இதை தாராளமாக விற்க ஆரம்பித்தார்கள். இப்படி மாலா டி விற்பனை மலைப்பூட்டும் வகையில் எகிறியபோதுதான் கேரள அரசு விழித்துக்கொண்டு மூணார் பகுதியில் இம்மாத்திரைக்குத் தடை விதித்தது.

மாலா டி மாத்திரை ஏற்படுத்திய தாக்கம், முதுவன் இனமே படிப்படியாக அழிந்துபோகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2013-ல் 2236 ஆக இருந்த இம்மக்களின் எண்ணிக்கை, தற்போது 1836 ஆக குறைந்திருக்கிறது. அரசு புள்ளிவிவரத்தின்படியே, எடமலைக்குடியில் உள்ள 325 திருமணத் தம்பதியரில் சுமார் 100 ஜோடிகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றன.

அரசின் முயற்சியால் இப்போது முதுவன் இனப் பெண்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருப்பது ஓர் ஆறுதல்.

தேவிகுளம் அரசு சுகாதார மைய மருத்துவ அலுவலர் அர்ச்சனா போன்றோர், இந்த விஷயத்தில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அட்டைகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, அர்ச்சனா ஒவ்வொரு மாதமும் இந்த மலைக் கிராமப் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார். மாலா டியை யார் யார், எதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறுகிறார். நான்கு செவிலியர்களும் இப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தங்களின் முயற்சியால் தற்போது நிலைமை மாறிவருவதாக இவர்கள் கூறினாலும், இன்னும் சில பெண்கள் மாதவிலக்கைத் தடுக்க ரகசியமாக மாத்திரை பயன்படுத்துவது தொடர்வதாகத் தெரிகிறது.

கேரளப் பகுதியில் இம்மாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்து கூடுதல் விலை கொடுத்தும் வாங்கி வந்துகொண்டிருக்கிறார்களாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்