பாலியல் தொழிலாளிகளுக்கு வழிகாட்டும் தேவதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்

பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் பணியை செய்து வருகிறார் சுனிதா கிருஷ்ணன்.

தனது சந்தோஷத்தை விட தன்னை சுற்றியுள்ளவர்களின் சந்தோஷம் தான் முக்கியம் என கருதும் மனப்பான்மை சுனிதாவுக்கு சிறுவயதில் இருந்தே இருந்துள்ளது.

பள்ளி முடிந்தவுடன் அனைவரும் வீட்டுக்கு திரும்பிவிடுவார்கள், சுனிதாவோ பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களை பார்ப்பதற்கு சென்றுவிடுவார்.

ஆனால் அங்கு இவருக்கு அனுமதி மறுக்கப்படும், அவற்றையெல்லாம் மீறி அங்கு சென்றுவருவார்.

பாலியல் தொழிலாளிகளின் நிலையையும் துயரங்களையும் களப்பணிகள் மூலம் அறிந்துகொண்டு, அவர்களை மீட்டு மறுவாழ்வு வழங்குவதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபடத் தொடங்கினார்.

சுனிதா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம், தனக்கு 16 வயது இருக்கும்போது சில மனித மிருகங்களால் பாலியல் சித்ரவதைக்கு ஆளானார்.

அதிலிருந்து தன்னை மீட்டெடுத்து, தன்னை போன்ற பாதிக்கப்பட்ட பெண்களையும் மீட்டெடுப்பதற்கான செயல்களில் ஈடுபடத்தொடங்கினார்.

ஒருமுறை காவலாளியிடம் சச்சரவு ஏற்பட்டபோது, "12,13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை உன்னால் மீட்க முடியுமா..?" என்று அவர் கேட்டதும் சுனிதாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

பிறகு அந்தச் சிறுமியை அங்கிருந்து மீட்பது என்று முடிவுசெய்தார். பலமுறை அந்தச் சிறுமியைச் சந்தித்து பேசியபோது, அந்தப் பிஞ்சு மனம் மிகவும் பலவீனமடைந்திருப்பதை உணர்ந்துகொண்டார்.

வயது வித்தியாசம் இல்லாமல் தன்னை நாடி தினம் தினம் வந்து செல்லும் ஆண்கள் எதற்காக பணம் தருகிறார்கள் என்பதைக் கூட புரியாததாய் இருந்தது அந்தக் குழந்தை.

உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பாதிப்படைந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.

அவ்வப்போது அவள் சொல்லும் சிதறிய வார்த்தைகளை ஒன்று சேர்த்து, அந்தச் சிறுமியின் சொந்த கிராமம் எது என்பதை சுனிதா அறிந்துகொண்டார். பாலியல் தொழில் பகுதியில் இருந்து அந்தச் சிறுமியை மீட்டு, அவளுடைய சொந்த கிராமத்துக்குச் சேர்க்க சுனிதா திட்டமிட்டார்.

அதற்காக தனது தந்தையின் நண்பர் உதவியை நாடினார், அவரது உதவியோடு ஒரு வாகனத்தில் அந்தப் பாலியல் தொழில் பகுதிக்குச் சென்றார்.

சுனிதாவின் அந்த மீட்பு முயற்சியில் மனம் இளகிய நான்கு பாலியல் தொழிலாளிகள் உதவிக்கு வந்தனர். அவர்களுடன் அந்தச் சிறுமியை மீட்டு அவளுடைய கிராமத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார்.

இந்த சிறுமியை தொடர்ந்து பல்வேறு குழந்தைகளையும், பெண்களையும் இந்த தொழிலில் இருந்து மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்து கொடுத்துள்ளார்,

இந்த நோக்கங்களுக்காக, பிரஜுலா என்கிற பெயரில் ஓர் அமைப்பையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

சமூகத்தால் ஏமாற்றப்பட்டவர்கள், வன்கொடுமைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மேற்கொண்டு வரும் அரும்பணிகளைப் பாராட்டும் விதமாக, நாட்டின் உயரிய அங்கீகாரங்களுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதை சுனிதாவுக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers