ஹாரிபாட்டர் புகழ் ஜேகே ரௌலிங் வாழ்க்கையை புரட்டிப் போட்ட 4 மணி நேர தாமதம்

Report Print Arbin Arbin in பெண்கள்

வயது வித்தியாசம் இன்றி எல்லாருக்கும் பிடித்தது ஹாரிபாட்டர் கதை. மாயாஜாலங்கள் நிறைந்த அக்கதையைப் போன்று பல திடுக் திருப்பங்கள் நிறைந்தது தான் அதை எழுதிய ஜே.கே.ரௌலிங்கின் சொந்தக் கதையும்.

தான் சந்தித்த சோதனைகளை எல்லாம் தன்னம்பிக்கை எனும் மந்திரக்கோலால் மட்டுமே விரட்டியடித்து, இன்று வெற்றியாளர் என்ற நிலையை அவர் எட்டியுள்ளார்.

1965 ஆம் ஆண்டு மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜே.கே.ரௌலிங்கிற்கு பெற்றோர் வைத்த பெயர் ஜோன்னே.

பதிப்பகத்தார் வற்புறுத்தியதாலேயே, தன் பெயரை இன்சியலாக்கி, தந்தையின் பெயரான ரௌலிங் என்ற பெயரில் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார் ஜே.கே.ரௌலிங். பின்னாளில் அதுவே அவரது அடையாளமாகிப் போனது.

கதை சொல்வதில் தீராக்காதல் இருந்தபோதும், படிப்பிலும் ரௌலிங் படி கெட்டி. குடும்ப வறுமை பாதிக்காதவாறு படிப்பிலும் கவனம் செலுத்தியதால், படிப்பிலும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார்.

படிப்பை முடித்த பின், போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.

அப்போது அவரது வாழ்க்கையில் காதல் மலர்ந்தது. காதலரைக் கரம் பிடித்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்.

ஆனால், அவரது திருமண வாழ்வு மகிழ்ச்சியாக நீடிக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில் கணவரைப் பிரிந்தார்.

விவாகரத்துக்குப் பின், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ரௌலிங், தற்கொலைக்குக் கூட முயற்சித்துள்ளார்.

கைக்குழந்தையுடன் வறுமை ஒருபுறம் வாட்டியபோதும், தன் கதை சொல்லும் ஆசையை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து அவர் தன் மகளுக்கு கதைகள் சொல்லி வந்தார்.

இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், 1990-ம் ஆண்டு ஒருநாள் மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்குச் செல்ல ரயிலுக்காக காத்திருந்தார் ரெளலிங்.

ரயில் சுமார் 4 மணிநேரம் தாமதமாக வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டார் ரௌலிங்.

அப்போது உருவானது தான் ஹாரிபாட்டர் கதைக்கான கரு. ரயில் பயணத்தில் மேலும் அந்தக் கதையை செதுக்கினார் ரௌலிங்.

மனதில் ஏதோ பொறி தட்ட, மற்றக் கதைகளைப் போல அதைக் காற்றில் எழுதாமல் தன் கைக்குட்டையில் குறிப்பாக எடுத்துக் கொண்டார் அவர்.

பின்னர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கதையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி நாவலாக எழுதி முடித்தார்.

பதிப்பகத்தார் பலர் அவரது நாவலைப் புறக்கணித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின், ப்ளும்ஸ்பரி எனும் பதிப்பகம் ரௌலிங்கின் ஹாரிபாட்டர் கதையைப் புத்தகமாக அச்சிட்டது.

அடுத்தடுத்து ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதை புத்தகங்கள் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனை சாதனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டியது.

ஆனால் வறுமையில் வாடிய காலம் மாறி, பணம் கொழித்தபோதும் ரௌலிங்கால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போன ரௌலிங், ஒரு கோடி பவுண்ட் பணத்தை மல்டிபிள் ஸ்கிலாராசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தானம் செய்தார்.

இதோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற, தன் சொத்தில் பெரும் பகுதியைத் தந்தார்.

விரும்பிய துறை எதுவாக இருந்தாலும் அதில் முழு நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் போராடினால் நிச்சயம் ஒருநாள் வெற்றி நிச்சயம் என தன் வாழ்க்கைப் பாடத்தின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார் ரௌலிங்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்