இந்தியாவையே கனரக லொறியில் வலம் வரும் சாதனை தமிழ்பெண்!

Report Print Kabilan in பெண்கள்

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நகரின் பல இடங்களில் பெண்கள் ஆட்டோ ஓட்டி செல்வதைப் பார்த்திருப்போம்.

இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கனரக லொறியை ஓட்டி சாதனைப் படைத்துள்ளார். கூலித் தொழிலாளியான ரெங்கையா என்பவரின் மனைவியான செல்லம்மாள்(48), கணவர் உடல்நலம் குன்றியதால் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான செல்லம்மாள், சிறிய ரக வாகனங்களை இயக்கத் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுநர் பயிற்சி பெற்ற இவர், கனரக வாகனங்களையும் ஓட்ட ஆரம்பித்தார்.

தற்போது 10 டயர்கள் கொண்ட லொறியை ஓட்டி, இந்தியா முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார். செல்லம்மாள், மும்பையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு லொறியை ஓட்டி வந்த நிலையில், கப்பலூர் மேம்பாலம் அருகே தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியதில் பக்கவாட்டில் கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோதே செல்லம்மாளின் சாதனை வெளியுலகுக்கு தெரிய வந்தது. மேலும், இந்த விபத்துக்கு காரணம் தனியார் பேருந்து தான் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் சாதனை குறித்து செல்லம்மாள் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நான் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று வருகிறேன்.

அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். என்னைப்போல நிறைய பெண்கள் ஓட்டுநராக உருவாக வேண்டும், அப்போதுதான் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

தற்போது செல்லம்மாளின் உழைப்பில், அவரது மகன்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்