ரோஹிங்கியா அகதிகளை பங்களாதேசில் இருந்து மியன்மாருக்கு திருப்பியனுப்ப ஏற்பாடு

Report Print Murali Murali in உலகம்

மியன்மார் - ரக்ஹைன் பகுதியில் நிலவி வந்த வன்முறைச்சூழல் காரணமாக பங்களாதேஷூக்கு புலம்பெயர்ந்த 1000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

மியன்மார் - பங்களாதேஷ் இடையே ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்ததை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு இடையே இப்படியொரு உடன்படிக்கை மியன்மார் மற்றும் பங்களாதேஷ் இடையே கையெழுத்தானது.

இதற்கு ரோஹிங்கியா அகதிகள் மட்டுமின்றி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அகதிகள் திருப்பி அனுப்பும் பணி தொடர்பாக அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்த உடன்படிக்கையின் படி, 2016 ஒக்டோபர் முதல் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகள் மியன்மாருக்குள் திரும்பி வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் 8000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மியன்மாருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு பட்டியலை மியன்மார் அரசிடம் பங்களாதேஷ் அரசு ஒப்படைத்தது.

அந்த பட்டியலில் உள்ள 1,100க்கும் மேற்பட்ட அகதிகளின் விபரங்களை சரிப் பார்த்துள்ளதாக மியன்மார் குடிவரவுத்துறை அமைச்சர் யு தெய்ன் சூவி தெரிவித்துள்ளார்.

சரிப்பார்க்கப்பட்ட பட்டியலை மியன்மார், பங்களாதேஷிடம் ஒப்படைத்துள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்