97 மில்லியன் மக்களுக்கு உதவும் ‘உலக உணவு திட்ட அமைப்பு’க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Report Print Gokulan Gokulan in உலகம்
47Shares

பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) 2020-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு போதுமான உணவுகிடைப்பதில்லை என்றும், இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 88 நாடுகளில் சுமார் 97 மில்லியன் மக்களுக்கு WFP உதவுகிறது என நோபல் அமைப்பு கூறியுள்ளது.

சர்வதேச ஒற்றுமை மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் அவசியமாகிறது என நோபல் குழுவின் தலைவரான பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

யுத்தம் மற்றும் மோதல்களின் ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் WFP வெற்றி பெற்றுள்ளதாகவும் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

முன்னெப்போதையும் விட தற்போதைய கொரோனா காலகட்டத்தில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கையானது இரட்டிப்பாகியுள்ளது என்றும் அதனை குறைக்கும் பணியில் WFP மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும், நோய்களுக்கு எதிராக மருந்துகள் தடுப்பூசியாக பயன்படக்கூடியதை போல குழப்பத்திற்கு எதிராக உணவு சிறந்த தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உலகெங்கிலும் உள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான பசியுள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உணவு மற்றும் உதவிகளைக் கொண்டு செல்ல ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட WFP ஊழியர்களின் பணியை அங்கீகரித்ததற்கு நன்றி” என WFP டிவிட் செய்துள்ளது.

WFP-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு பிரத்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் WFP உடன்பிரத்தானியா துணை நிற்கும் என்றும் அவர் டிவிட் செய்துள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்